ஆழ்வார்குறிச்சி: கடையம் புதுக்கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள செல்வவிநாயகர் கோயிலில் முதல் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. கடையத்தில் இருந்து புதுக்கிராமம் செல்லும் வழியில் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது. அந்த கிணறும், கிணற்றை சுற்றியிருந்த சுகாதார சீர்கேட்டை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து சீரமைத்து கடந்த 15ம்தேதி செல்வவிநாயகர் என்ற பெயரில் புதிய கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். அன்று சிறப்பு கும்ப அபிஷேகமும், விசேஷ பூஜைகளும் நடத்திய பின் முதல்முதலாக நேற்று நடந்த சங்கடஹர சதுர்த்தி கோலாகலமாக நடந்தது. நேற்று மாலை மேலகரம் சங்கரநாராயணன்-விஜயலட்சுமி குடும்பத்தினர் சார்பில் சிறப்பு பூஜை, விசேஷ அபிஷேகம் நடந்தது. முதல் முதலாக நடக்கும் சங்கடஹரசதுர்த்தி என்பதால் புதுக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இரவு செல்வவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.