பதிவு செய்த நாள்
27
ஜூலை
2013
10:07
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், கோவில் நிர்வாகம் மற்றும் புரோகிதர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது.பிரசித்தி பெற்ற, பவானி சங்கமேஸ்வரர் கோவில், காசிக்கு அடுத்தபடியானது என்பதால், பரிகாரம், முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்றவைகளுக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வர்.கடந்த சில காலமாக, இங்கு போலி புரோகிதர்கள் நடமாட்டத்தால், பக்தர்களிடம் பணம் பறிப்பு, திருட்டு போன்ற பல சம்பவங்கள் நடந்ததால், கோவில் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.இதனால், புரோகிதர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும், கோவில் பின்னால் புரோகிதம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மந்திரம் தெரிந்தும், அடையாள அட்டை இன்றி, பலர் வெளியேற்றப்பட்டதால், புரோகிதர்கள் அனைவரையும் அழைத்து, ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பரிகாரம் செய்யும் புரோகிதர்கள், இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தி, டோக்கன் பெற்று பரிகாரம் செய்ய வேண்டும், பெண்களை பரிகாரம் செய்யும்போது, உடன் அமர வைக்கக்கூடாது. பூஜை செய்த பொருட்களை, திரும்ப பயன்படுத்த கூடாது. வரும் செப்டம்பர், 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள், புரோகிதர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதில், தேர்வானவர்கள் மட்டுமே, இனி வரும் காலத்தில் புரோகிதம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் தவறியவர்கள், கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவில் நிர்வாகம் மூலம் பாடத்திட்டம் வழங்கப்படும்.பக்தர்களை, எந்த புரோக்கரும் வலுக்கட்டாயமாக அழைக்கக்கூடாது, என முடிவுகள் செய்யப்பட்டது. அறநிலைய துறை இணை ஆணையர் நடராஜன், ஈரோடு உதவி ஆணையர் வில்வமூர்த்தி, சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பவானி இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட, 80க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் பங்கேற்றனர்.