பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
திருத்தணி: ஆடிக் கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, நகராட்சி சார்பில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, இன்று (29ம் தேதி) முதல், ஆக., 2ம் தேதி வரை நடக்கிறது.
உத்தரவு: விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருமாறு, ஆட்சியர் வீரராகவ ராவ், திருத்தணி நகராட்சிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், ஆணையர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில், நகராட்சி முக்கிய பகுதிகளில் தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரும் வகையில், ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், குளக்கரை மற்றும் பஜார் பகுதிகளில், சுகாதார பணிகள் மற்றும் மின் விளக்குகள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. நகரில் சேறும், குப்பையை உடனே அகற்றுவதற்கு கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமித்துள்ளனர்.
ஆய்வு: பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யும் பணியில், நகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சியில் பக்தர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து, செங்கை மண்டல இயக்குனர் லட்சுமி, பொறியாளர் வெங்கட்ராஜ் ஆகியோர், திருத்தணிக்கு நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, நகராட்சி பொறியாளர் சண்முகம், துப்புரவு ஆய்வாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.