பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
கூவம்:கூவம் திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். கடம்பத்தூர் ஒன்றியம், கூவம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா மற்றும் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா, கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 23ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு, படுகளத்தில் பாஞ்சாலி அம்மன் சபதம் முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பகல், 12:00 மணிக்கு அக்னி மூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள், கரகம் எடுத்து, திருக்குளத்தில் இருந்து புறப்பட்டு மாலை, 6:00 மணிக்கு தீ மிதித்தனர். இதில் கூவம், குமாரசேரி, பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பகல், 2:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், மகா பாரத சொற்பொழிவும், அதைத் தொடர்ந்து விடையாற்றி அபிஷேகமும் நடக்கிறது.