பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
10:07
ஊத்துக்கோட்டை: எல்லையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சூளைமேனி கிராமத்தில் அமைந்துள்ளது எல்லையம்மன் கோவில். ஆடி மாதத்தை ஒட்டி இங்கு, 10 நாள் தீமிதி திருவிழா, கடந்த, 19ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. கடந்த, 26ம் தேதி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு திருவிளக்கு பூஜை மற்றும் கூத்து நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று முன்தினம், தீமிதி திருவிழா கோலாகலத்துடன் நடைபெற்றது. அன்றைய தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை நடந்த தீமிதி திருவிழாவில், கிராமத்தைச் சேர்ந்த, 210 பேர் தீ மிதித்தனர். பின்னர் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கன்னிகைப்பேர், நம்பாக்கம், பென்னலூர்பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில், தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.