பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
வத்திராயிருப்பு: இன்னும் சில நாட்களில் ஆடி அமாவாசை விழா துவங்க உள்ள சதுரகிரி மலையில், கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமான சதுரகிரி மலையில், கடும் வறட்சி நிலவுகிறது. மற்ற இடங்களில் பெய்த சாதாரண மழைகூட, இம்மலைப்பகுதியில் பெய்யாததால், மலையில் உள்ள ஆற்றுப்படுகைகள், ஆகாயகங்கை ஊற்று, கிணறுகள் வறண்டு விட்டன. எப்போதும் வற்றாமல் இருக்கும், நாவல் ஊற்றும், இந்த ஆண்டின் வறட்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வற்றி விட்டது. கடந்த ஆனி மாதம் நடந்த அமாவாசை, பவுர்ணமி உட்பட விசேஷ நாட்களில் சென்ற பக்தர்கள், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி, மிகவும் சிரமத்திற்குள்ளாயினர். கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள, ஒரேயொரு கிணற்றில் மட்டும், சிறிது ஊற்று நீர் வருகிறது. 5 மணி நேரம் ஊறியபிறகு, அரைமணி நேரம் மோட்டாரை இயக்கி, தண்ணீர் எடுக்கப்பட்டது. அதையும் பக்தர்கள் வரிசையில் நின்ற பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இன்னும் சிலநாட்களில் ஆடி அமாவாசை நடைபெற உள்ளது. ஆக.,6 ல் நடக்க உள்ள இவ்விழாவிற்கு, ஆக., 2 ம் தேதி முதலே, பக்தர்கள் வரத்துவங்கி விடுவர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இத்திருவிழாவிற்கு, அவ்வளவு பேருக்கும் தேவையான தண்ணீருக்கு, கோயில் நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என, தெரியவில்லை. அறநிலையத்துறை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததால், திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கூறுகையில், "லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். வருமானம் குவிகிறது. ஆனால் கோயில் நிர்வாகம். பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை. கழிப்பறை வசதிகள் இல்லாததால். மலைப்பாதையின் இருபுறமும் அசுத்தப்படுத்துகின்றனர். தற்போது பக்தர்கள் முகம் கழுவுவதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல், "மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி,""விழாவை கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே, மலையில் புதிதாக மூன்று இடங்களில் ஆழ்குழாய் கிணறு போடும் பணிகள் துவங்கி, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த இரு ஆழ்குழாய் கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. அன்னதான மடங்களில் உள்ள, ஆழ்குழாய் கிணறுகளிலிருந்தும் பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரச்னை இருக்காது. கடந்த சிலமாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட, புதிய கழிப்பறைக்கான கட்டுமானப் பணிகள், தண்ணீர் பற்றாக்குறையால் அரைகுறையாக நிற்கிறது. ஏற்கனவே உள்ள கழிப்பறைகளும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டன, என்றார்.