பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
கோட்டயம்: கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில், "மருந்து பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான தமிழக பக்தர்கள் கலந்து கொண்டனர். கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., தூரத்தில், கூத்தாட்டுகுளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. அறுநூறு ஆண்டு பழமையானது. வழிபடும் பக்தர்களுக்கு, மருந்தை பிரசாதமாக தருவது, இக்கோயிலின் தனிச்சிறப்பு. கோயிலில் தயாராகும் நோய் தீர்க்கும் மருந்தை கலந்து, அம்மனுக்கு பொங்கலிடுவது, இங்கு மட்டுமே நடக்கும் முக்கியமான நிகழ்ச்சி. வேதமந்திரங்கள் முழங்க, நிகழ்ச்சியை, ஸ்ரீதேவி அந்தர்ஜனம் துவக்கி வைத்தார். கொடிமரம் முன்பு பெரிய அடுப்பில் முதலில் சிறப்பு பூஜை நடந்தது. கோயில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் என்.பி.பி. நம்பூதிரி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நாராயணன் நம்பூதிரி கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டனர். பழநியை சேர்ந்த ஆர்யவைசிய குழுவினர் சிறப்பு பூஜை செய்தனர். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ஜோதிடர் எஸ்.வி.சொக்கலிங்கம் கூறுகையில், ""இங்கு தரும் மருந்து பிரசாதம் அபூர்வமானது. இங்கு தமிழிலும் அறிவிப்புகள் செய்வது வரவேற்கத்தக்கது, என்றார். பழநியை சேர்ந்த காஞ்சனா, உமாராணி கூறுகையில்,""தினமலர் நாளிதழ் செய்தியை பார்த்து இக்கோயிலுக்கு வந்தோம். இங்குள்ள அம்மனை தரிசித்தால் நோய்கள் தீரும் என்பது எங்கள் நம்பிக்கை. ஆடியில் அம்மன் தரிசனம் மனதிற்கு திருப்தி தந்தது, என்றனர். கோயில் நிர்வாகி ஹரி நம்பூதிரி கூறியதாவது: அம்மன் சன்னதியில், மருந்து பிரசாதத்தை நைவேத்யம் செய்து பொங்கலிடும் நிகழ்ச்சி, நாட்டிலேயே தனித்தன்மை வாய்ந்தது. மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி, ஆக.,16 வரை நடக்கும். தினமும் காலை 5 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும். இவ்வாறு கூறினார். மேலும் விபரங்களுக்கு 094478 75067, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்.