பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
நேற்று, ஆடிக் கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், ரயில் மற்றும் வாகனங்களில், திருத்தணிக்கு காவடி எடுத்து வந்து, முருக பெருமானை தரிசனம் செய்தனர்.
காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் : மேல் திருத்தணி நல்லாங்குளம், மலையடிவாரத்தில் உள்ள, சரவணப்பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள், காவடியுடன் புனித நீராடினர். பின், படிகளில் காவடிகளை வைத்து பூஜை செய்து, பக்தி பாடல்கள் பாடியபடி, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்திற்கு எடுத்துச் சென்று, நேர்த்திக் கடனை செலுத்தினர். சில பக்தர்கள், மொட்டை அடித்தும், அலகு குத்தியும், மலைக் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவர் முருகப் பெருமானுக்கு, மரகதக் கல், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் நகை அலங்காரம், புஷ்ப அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. இதே போல், காவடி மண்டபத்தில், <உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில், ஆறு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.
திருப்பதி பட்டு வஸ்திரம் : திருத்தணி முருகன் கோவிலுக்கு, 12 வது ஆண்டாக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஆடிக் கிருத்திகையன்று, பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முருகப் பெருமானுக்கு அணிவிக்க, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கோபால், உதவி செயல் அலுவலர் சீனிவாசராஜு மற்றும் கோவில் தலைமை குருக்கள், மதியம், 12:30 மணிக்கு வந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்,கோவில் தக்கார் ஜெயசங்கர் ஆகியோர் வரவேற்றனர். பின், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கொண்டு வந்த, பட்டு வஸ்திரங்களை, இணை ஆணையர் (பொறுப்பு) திருமகளிடம் வழங்கினர். தொடர்ந்து, திருத்தணி கோவில் நிர்வாகம் சார்பில், அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முதல் நாள் தெப்பத் திருவிழா : நேற்று நடந்த முதல் நாள் தெப்பத் திருவிழாவில், மலைக் கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலையடிவாரத்தில் <<உள்ள, சரவணப்பொய்கை குளத்திற்கு எழுந்தருளினார். இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், உற்சவர், தெப்பத்தில் மூன்று முறை திருக்குளத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.