பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இதையொட்டி, நேற்று அதிகாலை, 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அலங்கார ரூபத்தில் அம்மன் சன்னதி முன் உள்ள கொடிமரம் அருகே, பராசக்தி அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார்.சிவாச்சாரியார்கள், வேதமந்திரங்கள் முழங்க காலை, 10 மணிக்கு மேள தாளம் மற்றும் அதிர் வேட்டு முழங்க, கொடி ஏற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆடிப்பூர விழா தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கிறது.இதையொட்டி, தினமும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பராசக்தி அம்மன் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிறைவு நாளான, ஆகஸ்ட், 9ம் தேதி பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு அம்மன் சன்னதி முன், பக்தர்கள் தீ மிதி விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி மற்றும் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.
திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் காவடி வலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி, பக்தர்கள், 1,008 காவடி ஏந்தி மாட வீதி உலா வந்தனர். இதையொட்டி, அருணகிரிநாதருக்கு காட்சி அளித்த கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் முருகப்பெருமான் சன்னதியில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, என பல்வேறு வகையான, 1,008 காவடி ஏந்தி வீதி உலா வந்தனர், அப்போது, பக்தர்கள் முருகருக்கு அரோஹரா கோஷம் எழுப்பினர்.