பதிவு செய்த நாள்
03
ஆக
2013
10:08
சபரிமலை: சபரிமலையில் நடந்த, "நிறைபுத்தரி பூஜையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆக 2 இரவு நடை அடைக்கப்பட்டு, ஆவணி பூஜைக்காக, ஆக., 16ம் தேதி மாலை, மீண்டும் திறக்கப்படும். சபரிமலையில், ஒரு சில பூஜைகளை, திருவிதாங்கூர் அரண்மனையினர் முடிவு செய்வர். இதன்படி, ஆக 2 நடந்த, நிறைபுத்தரி பூஜைக்காக, ஆக 1 மாலை, 5:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. ஆக 2 அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வயலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர் கட்டுகள், கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை செய்தார்; மேல்சாந்தி, பூசாரிகள் தலையில் சுமந்து, கோவிலை வலம் வந்தனர். கோவிலில் நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு, பின், பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு, "அத்தாழ பூஜைக்கு பின், 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக, ஆக., 16ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆக., 21 வரை திறந்திருக்கும். ஆக., 17 முதல், அடுத்த ஒரு ஆண்டுக்கு, தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு பதவி வகிப்பார்.