பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
திருப்பூர் :ஆடி அமாவாசையையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு வேப்பிலை அலங்கார பூஜை நடந்தது. ஆடி அமாவாசை தினமான நேற்று, அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேக பூஜை, அலங்கார பூஜைகள் நடந்தன. திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில், பெரியபுத்தூர் பத்ரகாளியம்மன் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில் என சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடந்தன. விஸ்வேஸ்வரர் கோவில் அருகே, நீண்ட வரிசையில் நின்று, நூற்றுக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பெரும்பாலான கோவில்களில், அம்மனுக்கு வேப்பிலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள பாதிரி மரத்து அம்மன் சன்னதி வளாகத்தில், பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர். அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6.00 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், மூங்கில் தடுப்புகளால், க்யூ கட்டப்பட்டிருந்தன. திருமுருகன்பூண்டி அருகே உள்ள பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, 108 பெண்கள், பால் குடங்கள் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் துவங் கிய ஊர்வலம், அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பூண்டி வழியாக கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.