பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
பேரூர் : கோவை பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடிஅமாவாசை தட்சிணாயத்தில் வரக்கூடிய முதல் பிதுர்தினமாகும். இந்த தினத்தில் இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு, திதி கொடுத்து எள், அரிசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலில் வைத்து அதை பூஜை செய்து தீர்த்தத்தில் விடுவர். தொடர்ந்து, வீட்டில் முன்னோர்களுக்கு படையலிட்டு வடை, பாயாசத்துடன் சமையல் செய்து குடும்பத்தில் எல்லோரும் வழிபட்டு, காகத்துக்கு வைத்து பிதுர்கள் ஏற்றுக்கொண்டதாக வழிபடுவது, நமது சாஸ்திரத்தில் உள்ள நியதியாகும். நேற்று ஆடி அமாவாசை என்பதால் அதிகாலை 4.00 மணி முதலே திரளான பக்தர்கள் நொய்யல் படித்துறைக்கு திரண்டு வந்து, இறந்துபோன தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஒருசில பக்தர்கள் ஆற்றில் இறங்கி புனிதநீராடி வழிபட்டனர். இறந்துபோனவர்கள் நினைவாக, எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர், பின்னர், திதி காரியங்களை முடித்துவிட்டு செல்லும்போது, ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால், நொய்யல் படித்துறையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர், பட்டீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.