காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2013 11:08
விக்கிரமசிங்கபுரம்:ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் மிக முக்கிய விரத நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தால் தங்களின் பாவங்கள் நீங்கி சகல சவுகரியங்களுடன் சுபிட்சமாக வாழலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஆடி அமாவாசை தினமான நேற்று சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அதிகாலை முதல் பக்தர்கள் அதிகளவில் வரத்துவங்கி இரவு வரை நீடித்தது. பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி நதியில் புனித நீராடி தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். கோயிலில் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், பூதத்தார், தளவாய்மாடசுவாமி, பிரம்மராட்சஷி, பட்டவராயர், இருளப்பன், கரடி மாடசுவாமி, பாதாளகண்டிகை போன்ற தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டனர். கோயிலில் அய்யனாருக்கு பக்தர்கள் செருப்பு காணிக்கை அணிந்து வழிபட்டனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு வாசல் மற்றும் மேற்குவாசல் பகுதியில் பக்தர்கள் தீ மிதித்து பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சங்கிலி பூதத்தார் சுவாமிக்கு வேண்டிக் கொண்ட பக்தர்கள் இரும்பு சங்கிலியால் தங்களின் நெஞ்சில் அடித்து நேர்த்திக்கடன் மற்றும் காணிக்கையை செலுத்தியது பார்ப்பவர்களை பரவசமடைய செய்தது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு குக்கிராமங்களிலிருந்து பக்தர்கள் வல்லயத்தை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்று சுவாமி வழிபாடு நடத்தினர். காரையாரில் நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் தாமிரபரணி நதியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வருவதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.