ஆடி அமாவாசையை முன்னிட்டு, அழகர்கோவில் மலை நூபுரகங்கை தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடி ராக்காயி அம்மன், முருகன் மற்றும் சுந்தரராஜபெருமாளை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக மலை மீதுள்ள நூபுரகங்கை தீர்த்தம் செல்லும் பாதையை இரவு முழுவதும் திறந்து வைத்தனர். கோயில் சார்பில் மினி பஸ்சும் இரவு முழுவதும் இயக்கப்பட்டது. நள்ளிரவு முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீர்த்தமாடினர். தீர்த்தத் தொட்டியில் உள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அம்மன் வெள்ளி அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சோலைமலை முருகன் கோயிலில் பல்வேறு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தன. வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகன் கோயிலை வலம் வந்தார். சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் கோட்டை வாசல் வரை எழுந்தருளினார். இரவு பக்தர்கள் சார்பில் 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் சந்தன காப்பு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்தனர்.