பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
புதுடில்லி : "கேதார்நாத் சிவன் கோவில் கர்ப்பகிரக கட்டடம், லேசான சேதம் அடைந்துள்ளது என, தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம், 16 மற்றும் 17ம் தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்த பெருவெள்ளத்தில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கேதார்நாத் கோவில் பலத்த சேதமடைந்தது. கோவிலின் உட்புறம், இரண்டு நாட்களுக்கு முன் தான் சரி செய்யப்பட்டது; வெளிப்புறத்தை சரி செய்ய, இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கேதார்நாத் கோவிலை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வுத் துறையின், கூடுதல் இயக்குனர், பி.ஆர்.மணி நேற்று கூறியதாவது: வெள்ளத்தில் சிக்கிய கேதார்நாத் கோவிலின் ஸ்திரத்தன்மை குறித்து, இம்மாதம், 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆராய்ந்தோம். கோவிலின் கர்ப்பகிரகத்தின், வட கிழக்கு சுவரில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. கோவிலின் நுழைவாயில் மற்றும் வெளிப்புறங்களின் அனைத்து பகுதிகளிலும், பாறைகள் மோதியுள்ளதால், பாதிப்பு உள்ளது. எனினும், கட்டடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஸ்திரமாக உள்ளது. வரும் காலங்களிலும் நிலைத்து நிற்கும் என நம்புகிறோம். ஏனெனில், 11ம் நூற்றாண்டிலிருந்து, பல இயற்கை சீற்றங்களை, இந்த கோவில் எதிர்கொண்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் இருந்த சிலைகள் காணாமல் போயினவா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது; ஏனெனில், கோவில் எங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. கோவிலின் பின்புறத்தில் உருண்டோடி வந்த, 10 அடி உயரம், 30 அடி அகலத்தில் உள்ள பாறை தான், வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து கோவில் கட்டடத்தை காப்பாற்றியது, என, பக்தர்கள் கூறுகின்றனர். அந்த பாறையை, "தெய்வப் பாறை என்கின்றனர். அதை அகற்ற வேண்டுமா என்பது, இந்திய புவியியல் கணக்கெடுப்பு துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முடிவை பொறுத்தது. இவ்வாறு, அதிகாரி மணி தெரிவித்தார்.