பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
ஆர்.கே.பேட்டை:வெள்ளாத்தூர் அம்மன் கோவிலில், நேற்று பால்குட அபிஷேக திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்தூர் கிராமத்தில், செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினரின் குலதெய்வ கோவில் உள்ளது. இந்த மரபைச் சேர்ந்தவர்கள், ஆடி மற்றும் தை மாதங்களில், கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்து, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.சீதனம்ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில் உள்ள ஞானபிரசுன்னாம்பிகை தாயார், வெள்ளாத்தூர் குல மரபில் தோன்றியவர். இதன் காரணமாக, சிவராத்திரி நாளன்று வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் திருக்கல்யாணத்தில், வெள்ளாத்தூர் குலத்தினரின் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டு சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.நேற்று நடந்த பால்குட ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம்பிள்ளையார் கோவில் வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவில் வளாகத்தை சென்றடைந்தது. பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.ஆந்திர எல்லைப் பகுதிகள் மற்றும் மத்தூர், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஆட்டோ மற்றும் வேன்களில் பக்தர்கள் வந்து சென்றனர். இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது.