பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
எத்தனையோ போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டாலும் கூட, சிலர் ஆசை வயப்பட்டு, அதில் மீண்டும் மீண்டும் சிக்கி, தங்கள் பொருளை இழந்து போகின்றனர். ஏமாற்றுவது மட்டுமல்ல; ஏமாறுவதும் கூட ஒரு வகையில் தவறு தான். இதற்கு, பெருமாளின் வாகனமான கருடனின் தாயார் வாழ்வு உதாரணம். கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்... என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு... என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும்... என்றாள் கத்ரு.
வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்... என, உத்தரவு போட்டாள். பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன. வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே... என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச் சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்... என்றாள்.
கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத் தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து, இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக் கேட்கிறேன்... என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட ஜெயந்தியாகவும் கொண்டாடுவர். ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே, கருட பஞ்சமி கற்றுத் தரும் பாடம்.