பதிவு செய்த நாள்
14
ஆக
2013
10:08
சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கொசப்பேட்டையில், களிமண்ணால் ஆன கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும், 28 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான சிலை தயாரிப்பு, மூன்று மாதங்களாக, கொசப்பேட்டையில் நடந்து வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இங்கு, 27 விதமான கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.இவை, 10 ரூபாய் முதல், 350 வரை, விற்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள சாந்தி கூறியதாவது. இங்கு, 20 வருடங்களாக, சிலை செய்து வருகிறோம். முன்பை விட, தற்பொழுது விற்பனை குறைந்துள்ளது. முன்பு, இந்த பகுதியில், 100 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்தது. மூலப்பொருள்களின் விலை ஏற்றம், இடவசதியின்மை போன்ற காரணங்களால், தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கை, 20 ஆக குறைந்து உள்ளது. இவ்வாறு, சாந்தி கூறினார்.