பதிவு செய்த நாள்
10
மார்
2011
03:03
குழந்தையின் சொல்கேட்டு சித்ர கேது மனம் திருந்தினான். வாழ்க்கை என்றால் இன்னதென்று இப்போது அவனுக்கு வெகுவாகவே விளங்கி விட்டது. அவன் நாட்டை விட்டு தவமிருக்க போய்விட்டான். வெகுகாலம் தவமிருந்து அவனும் பிறவாநிலை பெற்றான். அவனுக்கு மோட்சம் பெற்றுக் கொடுத்த திருப்தியுடன், தன் தந்தை நான்முகனின் இல்லத்திற்குச் சென்றார் நாரதர். பிரம்மா அங்கே கவலையுடன் இருந்தார். அருகே, மனைவி கலைவாணி கோபத்தில் இருந்தாள். அம்மா! தந்தை கவலையுடன் இருக்கிறார். அவரது கவலைக்கு காரணம் உங்கள் கோபம் என்பதும் புரிகிறது. தாய் கோபமாக இருக்கும் போது, தந்தை கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது உலக நியதியாயினும், இது நம் வீட்டு பிரச்னை. என்னிடம் சொன்னால், தீர்த்து வைப்பேன் இல்லையா? என்றார் அப்பாவி பிள்ளை போல! சரஸ்வதிக்கு கோபம் இன்னும் அதிகமானது. அடேய்! நீ என் பிள்ளையாயிருந்தாலும், ஊரில் உள்ளவர்கள் யார் வீட்டிலாவது நல்ல பிள்ளை என பெயர் வாங்கியிருக்கிறாயா? எங்கு போனாலும் கலகம், சிண்டுமுடிப்பது... அது சரி...தகப்பன் ஒழுங்காக இருந்தால் தானே பிள்ளையான நீ ஒழுங்காக இருப்பாய். எனக்கு கட்டியவரும் சரியில்லை, பிள்ளையும் சரியில்லை. அந்த சிவனிடம் சொல்லித்தான் எனக்கு நல்ல விமோசனம் வாங்க வேண்டும், என்றாள் சரஸ்வதி.நல்ல பிள்ளை போல் தலை குனிந்து, அம்மா திட்டுவதைக் கேட்டு கொண்டிருந்த நாரதர், அம்மா! நானே எப்போதாவது ஒருநாள் தான் இந்தப்பக்கமே தலைகாட்டுகிறேன். அப்படி வரும் நாளிலும், உங்களிடம் திட்டு தான் வாங்க வேண்டுமா? தந்தையின் மீது தவறு என்றால், அவரைத்தானே நீங்கள் திட்ட வேண்டும். நான் ஒன்றுமறியா சிறுவன். உங்கள் கையால் ஒருவேளை உணவு சாப்பிட வந்தேன். நீங்களோ என்னையும் திட்டுகிறீர்கள்? என்று கோபிப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். மகனைத் தேற்றினாள் சரஸ்வதி.
நாரதா! உன் தந்தை தகாத காரியம் ஒன்றை இரண்டாவது முறையாகச் செய்துள்ளார். ஒருசமயம் என்னைப் படைத்த அவர், என்னையே விரும்பி கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். அதற்காக சிவபெருமானிடம் தண்டனையும் பெற்றார். இன்னும் அவர் திருந்தவில்லை.... என்ற சரஸ்வதியை இடைமறித்த நாரதர், இப்போதும் இன்னொருத்தி மீது கைவைத்து விட்டாரோ? என்றார். சரியாகச் சொன்னாய் நாரதா, சே...சொல்லவே நா கூசுகிறது. ஒரு பெண்ணான நான், அதிலும் கலைவாணியாக இருந்து உலகத்தோர் வாயில் நல்லதையே பேச வைக்க வேண்டும் என்பதைத் தொழிலாகக் கொண்ட நான், இவர் செய்த அநியாயத்தை எப்படி சொல்ல முடியும். அவரிடமே நீ கேட்டுக் கொள், என்று சொல்லி விட்டு கண்ணீர் பொங்க தன் இடத்திற்குப் போய் விட்டாள். நாரதர் தந்தையிடம் சென்றார். மகனைப் பார்த்ததும் தலை குனிந்த தந்தை, மகனே! உலகத்துக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நான், அவ்வப்போது மதிமயங்கி விடுகிறேன். நான் சொல்வதைக் கேள். என் பக்கம் நியாயமிருந்தால், எனக்காக உன் தாயிடம் பேசி அவளது கோபத்தைப் போக்கு, என்றார். நாரதரும் தந்தை சொல்வதைக் கேட்பதற்காக ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தார். நாரதா! தேவலோகத்தில் ரம்பை என்ற ஒருத்தி இருக்கிறாளே தெரியுமா? ஓ... அவள் தான் இதற்கு காரணமா? அவள் இந்திரனுக்காக படைக்கப்பட்டவள். இந்திரசபையின் நாட்டிய ராணி. நான் கூட இந்திரலோகம் செல்லும் சமயங்களில் அவளது நாட்டியத்தைப் பார்த்திருக்கிறேன். முற்றும் துறந்தவன் என்பதால் அவளது ஆடலை ரசித்திருக்கிறேன், அவளை ரசித்து சிவ துவேஷத்துக்கும், இந்திரனின் கோபத்துக்கும் ஆளானதில்லை, என்று குத்தலாகப் பதிலளித்தார் நாரதர். பிரம்மா இதைப் புரிந்து கொண்டாலும், தவறு செய்த தனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று நினைத்தபடியே நடந்ததைத் தொடர்ந்தார்.
அந்த ரம்பை தன்னை விட அழகில் சிறந்தவள் யாருமில்லை என நினைத்துக் கொண்டிருந்தாள். இதுகண்ட இந்திரன், அவளது கர்வத்தை அடக்க எண்ணினான். ஒரு முனிவரிடம் சென்றான். அவரது பெயர் நரநாராயணர். அவரிடம், சுவாமி! என் அவையிலுள்ள பெண்களில் அழகியான ரம்பை தன் அழகின் காரணமாக அகங்காரம் கொண்டிருக்கிறாள். அவளைத் திருத்த வழி சொல்லுங்கள் என்றான்.அந்த முனிவர் தன் தொடை எலும்பில் இருந்து ஒரு அழகியை உருவாக்கினார். அவளுக்கு ஊர்வசி எனப் பெயரிட்டு, இசையும், நடனமும் இயற்கையிலேயே அமையும் வகையிலான திறமையையும் கொடுத்து அவளை இந்திரனிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு ஊர்வசியுடனேயே அதிக நேரத்தைக் கழித்தான் இந்திரன். தன்னை விட அழகுள்ள ஒருத்தி வந்து விட்டதால், ரம்பைக்கு ஊர்வசி மீது கடும் பொறாமை! மேலும் இந்திரன் தன்னைத் தேடி வருவதே இல்லை என்றதும், அதன் அளவு மேலும் அதிகரித்தது. இதற்கு தீர்வு கேட்க அவள் என்னை நாடி வந்தாள். பிரம்ம பகவானே! நானும் என் தோழியருமே அழகிலும் நாட்டியத்திலும் உயர்ந்தவர்களாய் இருந்தோம். இப்போது தங்கள் தொழிலை கையில் எடுத்து கொண்ட ஒரு முனிவன், ஒரு பெண்ணைப் படைத்து இந்திரனிடம் ஒப்படைத்து விட்டான். அப்படியானால், உங்கள் படைப்பிற்கு மதிப்பில்லாமல் போய் விடும். எனவே ஊர்வசியை விட சிறந்த மற்றொரு அழகியை படையுங்கள். இந்த ஊர்வசியின் ஆட்டம் ஓய்ந்து விடும் என்றாள்.நானும் அந்த ரம்பை சொன்னதைக் கேட்டு இரக்கப்பட்டேன். மேலும், என் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்ட முனிவனுக்கு பாடம் புகட்ட நினைத்தேன். ஒரு பெண்ணை உருவாக்கினேன்! அவளுக்கு திலோத்துமா என பெயர் வைத்தேன். இங்கு தான் ஆரம்பித்தது வினையே! என்றவர் கதையைத் தொடர்ந்தார்.