பதிவு செய்த நாள்
25
டிச
2010
11:12
தலைவாணி மனமிரங்கினாள். குழந்தை கேட்டால் தாய் தரமாட்டாளா என்ன! தன்னிடமுள்ளது போலவே ஒரு சிறிய வீணையை உருவாக்கி பிரம்மபுத்திரனிடம் கொடுத்தாள். அதை மீட்டும் வல்லமையுடன், பாடும் திறனுக்கும் அருள் செய்தாள். அன்று முதல் பிரம்மபுத்திரன் வீணை மீட்டி தேவகானங்களை இசைத்து வந்தான். இந்த தேவகானம் எல்லா லோகங்களையும் ஈர்த்தது. சிவபெருமானும் இதை ரசித்தார். ஒருமுறை தாயிடம் பிரம்மபுத்திரன், அம்மா! சிலர் சர்வலோகங்களுக்கும் சென்று வரும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர். நானும் பாதாள லோகம், மேல் லோகம், பூலோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் நினைத்த நேரத்தில் வலம் வரும் சக்தி பெற வேண்டும். திரிலோக சஞ்சாரி என பெயர் வாங்க வேண்டும், என்றார். சரஸ்வதி அவனிடம், மகனே! நீ கேட்கும் விஷயம் அவ்வளவு எளிமையானதல்ல. அதற்கு சிவபெருமானின் கருணைப் பார்வை வேண்டும். நீ சிவனின் மனதை மகிழ்விப்பதன் மூலம் அதனைப் பெறலாம், என்றாள். இதை மனதில் வாங்கிக் கொண்ட பிரம்மபுத்திரன், தினமும் வீணாகானம் இசைத்தபடியே தேவலோக உயிர்களைக் கட்டிப் போட்டார். எதற்கும் கட்டுப்படாத சிவபெருமான் கூட இந்த இசைகேட்டு தலையசைத்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவி அவரிடம், தங்களையும், இந்த உலகத்தையும் மயக்கும் இந்த கானம் எங்கிருந்து வருகிறது? என்றாள். பார்வதி, பிரம்மபுத்திரன் என்ற சிறுவன் இதை வாசிக்கிறான். அவன் பிரம்மனால் உருவாக்கப்பட்டு, சரஸ்வதியை தன் தாயாக ஏற்றுக் கொண்டவன். தாயைப் போலவே வீணை மீட்டுவதில் வல்லவன். அவன் பேசினால் கூட அது கீதமாகத்தான் இருக்கும். அவனுக்கு நான் ஒரு வரம் தரலாம் என இருக்கிறேன். உன் அனுமதி கிட்டுமா? என்றார் கடைக்கண்ணை சிமிட்டியபடி. குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதே தாய், தந்தையான நமது கடமை. அதிலும் திறமை மிக்க குழந்தைகள் கேட்கும் போது ஒன்றுக்கு பத்தாகக் கொடுக்க வேண்டுவதும் நமது பணியே. இவனுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்? ஒன்றா...பத்தா? என்றாள் பார்வதி.
மூன்றுஎன முடித்த சிவனிடம், அதென்ன மூன்று, என்றாள் பார்வதி. பார்வதி! பூலோகத்திலுள்ள நமது பக்தர்கள் நாம் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்கு வந்தால், எத்தனை முறை சுற்றுகிறார்கள்? எனக் கேட்டார்.பொதுவாக மூன்று முறை.ஏன் அந்த மூன்றிற்கு முக்கியத்துவம் தெரியுமா? பார்வதி அதற்கான விடையையும் அவரிடமே எதிர்பார்த்தாள். அன்பானவளே! மூன்று என்ற சொல்லில் கடமை என்ற வார்த்தை பொதிந்து கிடக்கிறது. உலகில் குழந்தைகளுக்கு பெற்றவர்கள் பல பொருட்களை வாங்கிக்கொடுத்தாலும், அவர்கள் ஆர்வமின்றி மூலையில் போட்டு விடுகிறார்கள். பிரம்மபுத்திரன் அப்படியல்ல. தாய் அன்போடு கொடுத்த வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கிறான். அந்த இசை சர்வலோகங்களையும் கவருகிறது. அப்படிப்பட்ட பிரம்மபுத்திரனுக்கு மூன்று லோகங்களையும் பெற ஆசை. கடமையில் கருத்தாயிருக்கும் எவனும் மூன்று லோகங்களுக்கும் அதிபதியே. அவ்வகையில் பிரம்மபுத்திரனும் த்ரிலோகாதிபதியாகிறான். அவன் விருப்பம் போல அவனை திரிலோக சஞ்சாரியாக்கப் போகிறேன், என்றார் சிவன். இந்த நேரத்தில் நாரதர் சிவலோகத்துக்கு வந்தார். நந்தியெம்பெருமானை வணங்கி, தன்னை அறிமுகம் செய்து, சிவனைப் பார்க்க அனுமதி பெற்றார். நந்திதேவரும் அனுமதித்தார். நாரதர் பக்திப்பிழம்பாய் ஜொலித்த சிவபெருமானை வணங்கினார். இறைவா! உமையொரு பாலா! தங்கள் தரிசனம் கிடைக்க ஆவலாக இருந்தேன். என் தாயின் அறிவுரைப்படி அதற்குரிய சமயம் இப்போது தான் அமைந்தது. பரம்பொருளே! நான் நன்றாகப் பாடுவேன். இசையமைப்பாளனும் நானே. எனக்கு மூன்று லோகங்களிலும் தங்களின் திருப்புகழையும், ஸ்ரீமன் நாராயணனின் திருப்புகழையும் பாடுவேன். அதற்கேற்றாற் போல் திரிலோக சஞ்சாரியாகத் திகழும் பாக்கியம் வேண்டும், என்றார்.
சிவபெருமான் சிரித்துக் கொண்டே, நான் இப்போது ஆடப்போகிறேன். எனது நடனத்திற்கேற்ப உன் வீணையை மீட்டு. ஆட்டமும், பாட்டும் இணைந்து வந்தால் நீ கேட்டது கிடைக்கும், என்றார். அம்பலத்திலே ஆட ஆரம்பித்தார் சிவன். நாரதர் வீணை இசைக்க மற்றவர்கள் பல்வேறு தாளம் போட, ஆடி மகிழ்ந்த சிவபெருமான், நாரதர் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டார். வானவர்கள் அவருக்கு ஆசி கூறி, நாரத...நாரத... என அழைத்தனர். நாரதர் என்றால் இறையருள் பெற்ற இசை வல்லுநர் எனப் பொருள். நாரதர் பெரும் மகிழ்ச்சியுடன் நடந்ததை தாய் தந்தையிடம் விவரித்தார். பின்னர் அங்கிருந்து வைகுண்டம் புறப்பட்டார். திருமால் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் காட்சியை முதன் முதலாகப் பார்த்த அவர், நாராயண...நாராயண... என பரந்தாமனின் திருநாமங்களைத் துதித்தார். அன்றுமுதல் அவரது அன்றாடச்சொல்லில் நாராயண என்பது இடம் பெற்றது. திரிலோக சஞ்சாரியான நாரதரை உலக நலன் கருதி, கலகப்பிரியராக மாற்ற விரும்பினார். தங்களுக்கும் நண்பர், எதிரிகளுக்கும் நண்பர் என்ற நிலையை எடுக்கும் வகையில் சில லீலைகளைச் செய்தார். அதாவது, தேவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு எதிரான அரக்கர்களிடம் நட்பு கொள்வது போல் நடிப்பது, தேவர்களைப் பற்றிய ரகசியத்தை அரக்கர்களிடமும், அரக்கர்களைப் பற்றிய ரகசியத்தை தேவர்களிடம் சொல்வது...இப்படி செய்வதன் மூலம் அசுர சாம்ராஜ்யத்தைத் சரிப்பதென்ற நிலையை எடுத்தார். அது மட்டுமல்ல, அகம்பாவம் கொண்டவர்களை அவர் மூலம் அடக்கவும் ஏற்பாடு செய்தார்.