பதிவு செய்த நாள்
10
மார்
2011
03:03
அவள் அந்தக் குழந்தையை காட்டில் வீசியெறியும் முன், ஒருவேளை குழந்தை பிழைத்து விட்டால் என்னாவது என்ற எண்ணத்தில், கையோடு கொண்டு சென்றிருந்த விஷப்பாலைக் கொடுத்து மிருகங்கள் நிறைந்த இடத்தில் போட்டு விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. சித்ரகேதுவும், கிருததுத்தியும் மறுநாள் எழுந்தனர். தொட்டிலில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அரண்மனையெங்கும் தேடினர். குழந்தையைக் கொன்றவள் உட்பட எல்லோருமே அதனைத் தேடுவது போல நடித்தனர். காவலர்கள் பல இடங்களில் தேடினர். காட்டுக்குள் சென்ற ஒரு பிரிவினர் குழந்தை அங்கே இறந்து கிடந்ததைக் கண்டு அரண்மனைக்கு எடுத்து வந்தனர். அலறித்துடித்தான் சித்ரகேது. தனக்கு பிறந்த ஒரே வாரிசும் அழிந்து விட்டதால் நாட்டையும், வீட்டையும் இழந்து விட்டதாகவே கருதினான். பெற்றவள் மனம் என்ன பாடுபடும் என்ன சொல்லவே வேண்டாம். இந்த நேரத்தில் தான் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். நாரதர் தன்னுடன் அங்கிரா என்ற முனிவரையும் அழைத்து வந்திருந்தார். சுவாமி! என கதறியபடியே அவரது பாதங்களில் விழுந்து அழுதான் சித்ரகேது. நிலைமையைப் புரிந்து கொண்ட அவர்கள் சித்ரகேதுவுக்கு ஆறுதல் கூறினர். அங்கிரா முனிவர் சித்ரகேதுவிடம், மன்னா! இறந்தவர்கள் வீட்டில் அழுகை சத்தத்துக்கு இடமே இருக்கக்கூடாது. காரணம், நீயும் ஒருநாள் இறக்கத்தான் போகிறாய். இதை உன் பிள்ளை என்கிறாயே! அப்படி உனக்கு பிள்ளையாக பிறக்கும் முன் இது எங்கிருந்ததுசொல்? என்றார். மன்னன் ஏதும் சொல்லத் தோன்றாமல் நின்றான். பார்த்தாயா, சித்ரகேது! இந்த கேள்விக்கு இங்கிருக்கும் எவராலும் பதில் சொல்ல முடியாது.
நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். எங்கிருந்து வந்தோமோ, அங்கேயே செல்கிறோம். மகன், மகள், மனைவி, கணவன் என்ற உறவெல்லாம் வெறும் மாயை தான். இவர்கள் யாருடனாவது நீ சேர்ந்து வந்தாயா? அல்லது இவர்களையும் அழைத்துக் கொண்டு போகப் போகிறாயா? தனியாகவே வந்தோம்; தனியாகவே செல்வோம். மரணம் எந்த வயதில் நிகழ்ந்தாலும், அது கண்டு கலங்கக்கூடாது. மனதைத் தேற்றிக் கொண்டு, உன் பணிகளில் ஈடுபடு, என்றார். மன்னனின் மனம் சமாதானம் ஆகவேயில்லை. புலம்பித்தவித்தான். நாரதர் மன்னனை அழைத்தார். மன்னா! அங்கிரா முனிவர் உலக நடப்பை எடுத்துச் சொன்னார். அது கேட்பதற்கு கசப்பாயிருந்தாலும், நிஜம் அது தான். இருந்தாலும், இவ்வளவு தூரம் சொல்லியும் நீ கேளாததால், உன் குழந்தைக்கு நானே உயிர் கொடுக்கிறேன். மீண்டும் நீ வளர்த்து வா, என்றார். மன்னனும், கிருதத்துதியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிருதத்துதியின் மற்ற சகோதரிகளுக்கு வியர்த்து விட்டது. எல்லாரும் வியப்புடன் நின்றனர். அங்கு குவிந்திருந்த நாட்டு மக்கள் தங்கள் இளவரசன் மரணத்தை வென்றவனாகப் போகிறான் என்ற மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் பெருக நின்றனர். அந்த பதைபதைப்பான நேரத்தில், நாரதர் குழந்தையின் அருகில் சென்றார். கண்மூடி சில மந்திரங்களைச் சொன்னார். என்ன அதிசயம்! குழந்தை கலகலனெ சிரித்தபடி விழித்தது. மன்னன் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டான். அப்போது மன்னா... மன்னா... மன்னா... என்றும், தாயே! தாயே! தாயே... என்றும், நாட்டு மக்களே... நாட்டு மக்களே...நாட்டு மக்களே! என்றும் இனிய குரல் மும்முறை வெளிப்பட்டது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தனர்.
கேட்ட குரல் குழந்தையின் குரலாக இருக்கவே, மன்னன் குழந்தையைப் பார்த்தான். குழந்தை தான் பேசியது. நாரதர் அந்தக் குழந்தையிடம், அன்புக் குழந்தையே! நீ ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் உயிர்விட்டாய் என உன்னைப் பெற்றவர்கள் வருந்துகின்றனர். நாட்டு மக்கள் வருந்துகின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கே வாழ்ந்தால் என்ன? என்றார். குழந்தை கலகலவென சிரித்தது. மகரிஷி! இந்தப் பிறவியால் எனக்கு என்ன லாபம்? இதோ! இந்த தாய் என்னைப் பெற்றாள். மற்ற தாய்மார்களெல்லாம் என்னைக் கொன்றனர். ஏன் இது ஏற்பட்டது? பொறாமையால் தானே! இன்னும் நான் அரசனாக வேண்டும். அப்போது, பகைவர்கள் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள். இதோ நிற்கும் என் தந்தை பல போர்க்களங்களுக்குச் சென்றார். பலரின் தலையைக் கொய்து சிரித்தார். அப்போது அந்த எதிரிகளின் மனைவிமார் அழுதனர். பலர் தீக்குளித்தனர். அந்த மரணங்களைக் கண்டு சந்தோஷப்பட்ட இவர், இப்போது என் மரணத்துக்காக ஏன் அழுகிறார்? மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்போர், குறைந்த நாட்களில் தாங்களும் துக்கத்தை அடைவர். இந்த நியதி இவருக்கு ஏன் புரியவில்லை? அவரவர் வினைப்பயன்படியே அனைத்தும் நடக்கிறது. மேலும் பிறந்து பிறந்து மறையும் வாழ்க்கை எத்தனை நாளுக்கு தான்? நான் இன்னும் சிலகாலம் இவர்களோடு இன்புற்று இருந்தாலும், என்றாவது ஒருநாள் மறையத்தானே போகிறேன்? அது இன்றே நிகழ்ந்ததில் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது? கடற்கரை மணலை விட அதிக எண்ணிக்கையில் பிறவிகள் வருகின்றன. அவற்றையெல்லாம் வேகமாக முடித்து விட்டு திருமாலின் பாதங்களில் நிரந்தரமாக தங்கிவிடுவதே மேலானது, என்றது.