இந்தியாவில் நாரதருக்குத் தனிச் சன்னதி உள்ள ஒரே தலம் மயிலாடுதுறை தாலூகாவில் உள்ள கடலங்குடி ஸ்ரீநாரத வரதராஜப் பெருமாள் கோயில். காளிங்க நர்த்தனக் கிருஷ்ணனுக்குத் தனிக் கோயில் உள்ள ஒரே தலம் கும்பகோணம் அருகிலுள்ள ஊத்துக்காடு நர்த்தனக் கிருஷ்ணர் திருக்கோயில். சிறு குழந்தை அனுமனுக்குத் தாய் அஞ்சனை தாய்ப்பால் ஊட்டும் வகையில் அமையப் பெற்றுள்ள ஒரே கோயில் ஹரித்துவாரிலுள்ள சண்டிதேவி ஆலயம். ஒரே தலத்தல் பெருமாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும், சயனக் கோலத்திலும் உள்ள மூன்றுக்கும் திருமஞ்சன மேனிகள் உள்ள தலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் (இதே அமைப்பு திருநீர்மலையிலும் உள்ளது)
நான்கு வேதங்களைத் தன் நான்கு முகங்களாகக் கொண்ட பிரம்மன்-சரஸ்வதி, சாவித்திரியுடன் அருள்புரியும் ஒரே தலம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீவேத நாராயணப் பெருமாள் தலம். மேலும், இங்கு பெருமாள் சன்னிதானத்தில் இடப்புறம் யோக நரசிம்மர் தாயாருடன் உள்ள அமைப்பும், வலப்புறம் பிரம்மன்-சரஸ்வதி, சாவித்திரி உடன் (காயத்ரி) உள்ள அமைப்பும் வேறு எங்கும் இல்லை. இங்குள்ள பட்டர் அர்ச்சனையை 108 நாமத்துடன் மிக அழகாக ராகத்துடன் பக்திப்பூர்வமாக ஆத்மார்த்தத்துடன் சொல்லி (சில சமயம் விளக்கம் அளித்து) பூஜை செய்வது மிகுந்த ஆனந்தத்தை அளிக்கின்றது. இந்தியாவிலேயே லக்ஷ்மணருக்கெனத் தனியாக கோயில் அமைந்துள்ள தலம் கேரளாவில் மலப்புறம் மாவட்டத்திலுள்ள திரூர்.