பதிவு செய்த நாள்
16
ஆக
2013
04:08
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது முருங்கத்தொழுவு கிராமம். இந்த ஊர்மக்கள் அம்மனுக்குக் கோயில் கட்டி, தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருகிறார்கள். அம்மனின் திருநாமம் - வாகைத் தொழுவு அம்மன். மகிஷாசுரமர்த்தினி, வேலாயுதம் தாங்கிய முருகக் கடவுள், விநாயகர், கருப்பராய சுவாமி ஆகியோரும் இங்கு தனித்தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
சித்திரை மாதப் பிறப்பு நாளில், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். அம்மனின் திருக்கோலத்தைக் கண்டு பலருக்கும் அருளே வந்துவிடுமாம்! ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல், எல்லா நாட்களிலும் இங்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து, பொங்கல் படையலிட்டு, அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். ஆடி வெள்ளிக்கிழமையில் விமரிசையாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆவணி மாதத்தில் அம்மனுக்குப் பொங்கல் படையல் விசேஷமாக நடைபெறும். இந்த நாளில், அம்மனின் பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம், குடும்ப சகிதமாக வந்து, படையலிடுவார்கள். அப்போது, ஊரின் நாலாதிசைகளிலும் குதிரைச் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்வார்கள். எல்லைகளில்... குதிரை குலுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். வருடம் முழுவதும் எல்லைப் பகுதியை காக்கிற அம்மனின் காவலாதிகளுக்குச் செய்கிற மரியாதையாகச் செய்கிற சடங்கு அது என்கின்றார்கள் கிராம மக்கள்! அப்போது, குதிரைச் சிலையானது நன்றாகக் குலுங்கி ஆடினால், அந்த வருடம் விவசாயம் செழிக்கும்; கிராம மக்கள் ஒரு குறையுமின்றி நிம்மதியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை!