பதிவு செய்த நாள்
16
ஆக
2013
04:08
வைணவ, சிவத் திருத்தலங்கள் சிலவற்றிலுள்ள பிள்ளையார் கோயில்களில் கன்னிமூல கணபதி என்று எழுதி வைத்திருக்கின்றனர். அப்படியே அழைக்கவும் செய்கின்றனர். இது தவறு. கன்னிமூலை கணபதி என்பதே சரியானதாகும். திசைகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நீங்கலாக வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு திசைகளும் உள்ளன. இதில் வடகிழக்கை ஈசானிய மூலை எனவும், தென்கிழக்கை அக்கினி மூலை எனவும், தென்மேற்கை கன்னிமூலை எனவும், வடமேற்கை வாயுமூலை எனவும் அழைக்கின்றனர். சில கோயில்களில் தென் மேற்கில் அமையப்பெற்றிருக்கும் பிள்ளையார் கோயில், திசையைக் குறிக்கும் வகையில் கன்னி மூலை கணபதி என்றே அழைக்கப்படுகின்றது.
உதாரணத்துக்கு சபரிமமூலை ஐயப்பன் சன்னிதானம் கிழக்கு நோக்கி உள்ளது. அதன் வலப்பக்கத்துக்கும் பின்பக்கத்துக்கும் நடுவில்(தென்மேற்கில்) பிள்ளையார் அமைந்துள்ள சன்னிதானம் கன்னிமூலை கணபதி என்றே அழைக்கப்படுகின்றது. சரணம் சொல்லும்போது, சில ஐயப்ப பக்தர்கள் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா என்று தவறுதலாக விளிக்கின்றனர். சில புத்தகங்களில்கூட பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. கன்னிமூல கணபதி என்று பல கோயில்களில் எழுதியிருப்பதை திருத்தி கன்னிமூலை என்று சரியாக எழுதவும் உச்சரிக்கவும் வேண்டும்.