பதிவு செய்த நாள்
19
ஆக
2013 
10:08
 
 காஞ்சிபுரம்: பல லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்பட்ட சர்வ தீர்த்த குளத்தை, முறையாக பராமரிக்காததால், மாட்டு தொழுவமாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. குளத்தை மீட்டு பராமரிக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், சர்வ தீர்த்த குளம் அமைந்துள்ளது. இக்குளம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், இந்த குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளம், கடந்த 2011ம் ஆண்டு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், தூர் வாரியும், குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்தும், அங்கு அழகிய பூங்கா அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதை பராமரிப்பதற்காக, ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அப்பகுதி மக்கள், குளத்தின் வளாகத்திற்குள் மாடுகளை கட்டுவது, படித்துறைகளில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை, தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கை எடுக்காமல், தயக்கம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், குளம் முழுவதும் சீரழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலைத் துறை ஒருவர் கூறுகையில், "ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.