பதிவு செய்த நாள்
20
ஆக
2013
10:08
தர்மபுரி: பூமி தான இடத்தில் அனுமதியின்றி கட்டிய கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, வருவாய்த்துறையினர் தடை செய்தனர். தர்மபுரி, சத்யா நகரை சேர்ந்தவர் பழனி. இவர் இருமத்தூரில் பூமிதான இடத்தில் அனுமதியின்றி, 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சிவகாளிம்மன் சிலையும், கோவிலும் கட்டி வந்தார். கட்டுமான பணிகள் முடிந்ததை தொடர்ந்து, பழனி ஸ்ரீசிவகாளியம்மன் கோவிலுக்கு வரும், 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தார்.
கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (ஆக.,19) முகூர்த்தகால பூஜைகள் நடந்தது. விழா தொடர்பாக பழனி விளம்பரம் செய்து வந்தார். கும்பாபிஷேக விழாவை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தி வைப்பதாக பத்திரிக்கைகள் அச்சடித்து பழனி வினியோகம் செய்தார். பூமி தான இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முயன்றதாக பழனி மீது ஆர்.ஐ.,மஞ்சுநாதன், அரூர் ஆர்.டீ.ஓ., சந்திரசேகர், தாசில்தார் செந்தில்அரசு ஆகியோரிடம் புகார் செய்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த ஆர்.டீ.ஓ., சந்திரசேகர் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து, கும்பாபிஷேக விழா நடத்த தடை விதித்தனர். அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.