பதிவு செய்த நாள்
21
ஆக
2013
04:08
பிரம்மனுக்கு நான்கு தலைகள் உண்டு. ஆனால் ஒரு தலையுடன் கூடிய பிரம்மன் கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் உள்ள மலையாண்டி சுவாமி கோயிலில் காணப்படுகிறார். இங்கு பிரம்மனுக்கு ஒரு தலையும், நான்கு கைகளும் உள்ளன. வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் தர்ப்பைப் புல் கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் கொண்டு அருள்பாலிக்கிறார் இந்த ஒரு தலை பிரம்மன்.
கல்லால் ஆனது மலை. ஆனால் ஒரு ஊரில் மண் மலையில் கோயிலே அமைந்துள்ளது. நானூறு அடி உயரம் கொண்ட அந்த மலையில் சிவபெருமான் கைலாசநாதராக கோயில் கொண்டுள்ளார். இறைவி பெயர் பிரசன்ன நாயகி. புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள நெடுங்குடி என்கிற கைலாசபுரத்தில்தான் அந்தக் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் மண் மலைமீது அமைந்துள்ள சிவன் கோயில் இது ஒன்றே என்கிறார்கள்.
தக்கோலத்திற்கு சுமார் ஏழுமைல் தொலைவில் உள்ள புள்வேளூர் என்ற ஊரில் (தற்போது இதன் பெயர் பள்ளூர்) ஏழு கிணறு என்ற இடம் உள்ளது. இக்கிணற்றிற்கு சங்ககாலப் பெருமை உண்டு என்பதும், இக்கிணற்று நீர் இன்றளவும் வற்றாது சுரந்து கொண்டிருப்பதும் ஓர் அபூர்வமான விஷயம். ஒரு சமயம் சங்க காலப் புலவர் ஒளவையார் புள்வேளூர் பூதனிட்ட வரகரசிச் சோற்றை உண்ட மகிழ்ச்சியால் பாடியபோது, இக்கிணற்றிலிருந்து நீர் சுரக்கத் தொடங்கியது என்பது வரலாறு. இன்றும் இது நீடிப்பது வியப்பான விஷயம்.
நவகிரக நாயகர்களுள் செவ்வாய் மிகவும் வலிமை மிக்கவர். சகோதரர், பூமியோகம், உடல் ஆரோக்யம் ஆகிய பலன்களை தருபவராக இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உண்டாகும் என்பர். இதனைப் போக்கு தலமாக விளங்குகிறது வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய் வழிபட்ட சிவலிங்கம் இருப்பதும், செவ்வாயின் அதிதேவதையான முருகப்பெருமன் முத்துக்குமார சுவாமி என்ற பெயரில் இங்கு வீற்றிருப்பதும் சிறப்பு. விரதமிருந்து இவரை வழிபாடு செய்வோருக்கு திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.