பதிவு செய்த நாள்
22
ஆக
2013
01:08
சாஸ்திரங்களும் வேதங்களும் அநாதி காலமாக இருந்துவரும் சத்தியமான உண்மைப் பொருள். இவற்றை மாற்றவோ, திருத்தவோ கூடாது. மகரிஷிகளும் முனிவர்களும் கடும் தவம்புரிந்து நினைத்து நினைத்து உணர்ந்து, எது உண்டோ அதை எழுதினார்களே தவிர, தங்கள் கற்பனையினால் எழுதவில்லை. அதை எல்லாம் நாம் மாற்றப் பார்த்தோமேயானால் விபரீதமான விளைவுகளையே அனுபவிக்க நேரிடும். இதை விளக்க ஒரு சம்பவம்.
ஒரு ஆச்சாரியர் சீடர்களுக்கு பாடங்கள் போதித்து வந்தார். ஒருநாள் இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்று போதித்தார். ஆனால் சீடர்களோ, இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. வித்வான்களையும் இழுக்கும் சக்தி கொண்டவை என்றார்கள் ஆச்சாரியரோ அதை ஒப்புக்கொள்ளவில்லை. மறுநாள் காலை ஆசிரமத்தில் ஆச்சாரியர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அந்தசமயம் ஆசிரமத்தின் வழியாக ஒரு அழகான பெண் கையில் குடத்துடன் தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். ஒரு வினாடி ஆச்சாரியரின் மனம் ஸ்தம்பித்துவிட்டது. என்ன சவுந்தர்யம்! என்ன நளினம்! மனம் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண் அவரைக் கடந்து ஆசிரமத்தில் நுழைந்து உட்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டாள்.
ஆச்சாரியரோ நடுங்கிப் போனார். சீடர்கள் பாடம் கேட்கவரும் நேரமாகிவிட்டது. ஆச்சாரியர் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார் கதவு திறக்கப்படவில்லை. உடனே ஆச்சாரியர் ஆசிரமத்தின் மேலே ஏறி, வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுகளைப் பிரிக்கத் தொடங்கும்போது இரண்டு மூங்கில்களுக்கிடையில் கால்கள் மாட்டிக் கொண்டன. மூங்கில் கணுக்கள் குத்தி ரத்தம் வழிந்தது வேதனை தாங்கவில்லை. அந்தசமயம் சீடர்கள் வந்தனர் ஆச்சாரியர் நேற்று சொல்லிக்கொடுத்தபடியே. இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆச்சாரியரோ தாங்கமுடியாத அவஸ்தையில் இருந்தார். சீடர்கள் ஆசிரமத்தின் மேலே ஆச்சாரியர் இருப்பதைப் பார்த்தார்கள்.
அவர்கள் வியப்போடு குருவே மேலே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க, ஆச்சாரியரோ, நான் செய்வது இருக்கட்டும். நேற்று நான் சாஸ்திரத்தை திருத்தி எழுதிய மந்திரத்தை உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் இந்த்ரியக்ராம் வித்வாம்ஸமபி கர்ஷதி, கர்ஷதி, கர்ஷதி, கர்ஷத்யேவ என்று கதறினார். இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை அவை வித்வான்களையும் இழுக்கும் இழுக்கும் இன்னும் இழுக்கும் என்று சொன்னபோதே ஆச்சாரியர் பொத்தென்று உள்ளே விழுந்தார். ஆனால் அங்கு யாரையுமே காணவில்லை. அப்படியானால் வந்தது யார்? சாஸ்திரமே பெண் உருக்கொண்டு வந்து அவரைத் திருத்தியிருக்கிறது.
இராவணேஸ்வரனைப்போல சர்வ வல்லமை படைத்தவர் யாருமே இல்லை. சிவ பக்தன் வீராதி வீரன். கயிலை மலையையே தனது கைகளால் தூக்கி, தனது நரம்புகளையே வீணையாக மீட்டி சாமகானம் பாடி, சிவபெருமானிடம் சந்திரஹாஸம் என்ற வாளைப் பெற்றவன். எத்தனை இருந்தும் தன் உள்ளே இருக்கிற காம இச்சையை அடக்க முடியாமல் மனைவி, மக்கள் உற்றார், உறவினர், நாடு, செல்வம், புகழ் என அனைத்தையும் இழந்து தன்னையும் இழந்தான். ஐம்புலன்களை வெல்வதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. தியானம், தவம் போன்றவற்றைத் தொடர்ந்து பழகவேண்டும். இந்த இந்திரியங்களை வென்றால் நாம் எதையும் பெற்றுவிடலாம்.