பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
அவிநாசி:ஓம் சக்தி பராசக்தி கோஷம் ஒலிக்க, ராயம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆக, 23 நடந்தது.அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் விநாயகர், மாரியம்மன் கோவில் திருப்பணி செய்யப்பட்டும், ஆகாசராயருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டும், ஆக, 23 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கிய அவ்விழாவில், நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. ஆக, 23 காலை நிறைவு கால பூஜைகளுக்குபின், சிவாச்சாரியார்கள் கும்பங்களை எடுத்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக சென்றனர்.அதன்பின், விநாயகர், மாரியம்மன், ஆகாசராயர் சன்னதி கோபுரங்களுக்கு ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவ மூர்த்தி சன்னதிகளிலும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகத்துக்கு பின், மலர் அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன. திருப்புக்கொளியூர் ஆதீன மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் முன்னிலை வகித்து, ஆசியுரை வழங்கினார்.கும்பாபிஷேக பூஜைகளை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த அன்பு கிருபாகர சுப்ரமணியம் தலைமையில், சுந்தரேச குருக்கள், ராமநாமநாதசிவம், அருணந்தி சிவம், அர்விந்தாக்ஷ சிவம் ஆகியோர் மேற்கொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.