பதிவு செய்த நாள்
27
ஆக
2013
11:08
திருத்தணி: மன்னாரீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேக விழாவை, முன்னிட்டு, 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு கிராமத்தில், மன்னாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த மாதம், 12ம் தேதி நடந்தது. இதையடுத்து, நேற்று, மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை மற்றும், 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நண்பகல், 11:00 மணிக்கு, 1,008 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக, கோவில் வளாகம் வரை ஊர்வலமாக வந்தனர்.பின்னர், மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.