திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும், திறந்த கதவு மூடவும் பாடிய சிவத்தலம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில். இங்குள்ள கருவறையில் விளக்கைத் தூண்டிய எலி, மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்கும் பேறு பெற்றது. இத்தலம் தீர்த்தமகிமை மிக்கதாகும். கோயில் எதிரில் அமைந்த வேத தீர்த்தத்திற்கு 108 பெயர்கள் உண்டு. தற்போது இது சந்நிதி தீர்த்தம் எனப்படுகிறது. இது தவிர மணிகர்ணிகை தீர்த்தமும் இங்குள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி, கங்கை, யமுனை, நர்மதா, சிந்து, காவிரி ஆகிய ஐந்து நதிகளும் தங்களிடமுள்ள பாவத்தைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். இத்தலத்திற்கு தெற்கிலுள்ள தீர்த்தம் கோடியக்கரை ஆதிசேது தீர்த்தம். ஆடிப்பெருக்கு உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் இத்தீர்த்தங்களில் நீராடி, இக்கோயிலில் திருமணக்கோலத்தில் காட்சிதரும் சிவன், அம்பிகையைத் தரிசித்தால் திருமண யோகம் விரைவில் உண்டாகும்.