காசியை விட சிறந்ததலம் விருத்தாசலம் என்று கந்தபுராணம் போற்றுகிறது. முக்திதலமான இங்கு, இறந்த உயிர்களின் காதில் சிவனே மந்திர உபதேசம் செய்து முக்தி கொடுப்பதாக ஐதீகம். சிவனின் தோழரான சுந்தரர் இறைவனிடம் பெற்ற பொன்னை, இங்குள்ள மணிமுத்தாறு நதியில் போட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்துக் கொண்டதாகச் சொல்வர். இது முதன்முதலில் தோன்றிய மலைத்தலம் என்பதால் முதுகுன்றம் என பெயர் பெற்றது. மணிமுத்தாற்றிலுள்ள புண்ணிய மடுவில் பக்தர்கள் நீராடுவர். வடக்குகோபுர வாசலுக்கு நேரே இப்பகுதி உள்ளது. ஆடிப்பூரத்தன்று இங்கு விருத்தகிரீஸ் வரருக்கும், பெரிய நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.