பதிவு செய்த நாள்
31
ஆக
2013
03:08
ஊத்துக்கோட்டை: ஸ்ரீவேணுகோபாலசுவாமி கோவிலில், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீராதாருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த, 29ம் தேதி துவக்க நாளில், கோவில் வளாகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, கிருஷ்ண பகவான் ஊஞ்சலில் சாற்றி வைத்து தாலாட்டு பாடல்கள், பஜனை பாடல்களுடன் விழா நடந்தது. தினமும் இரவு பஜனை பாடல்கள் பாடப்படும். விழாவின் முக்கிய நாளான வரும், 4ம் தேதி கோவில் முன் திருத்தேரில், கிருஷ்ணர் படம் அலங்கரித்து, அவர் முன்னிலையில் உறியடி திருவிழா நடைபெறும். யாதவர்கள் உரியை பிடிக்க முயற்சி செய்யும்போது, மக்கள் மஞ்சள் நீர் ஊற்றுவர். இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் நிறைவு நாளான வரும், 7ம் தேதி ஸ்ரீவேணுகோபால சுவாமிக்கும், ராதாருக்மணிக்கும், புரோகிதர்கள் மந்திரம் ஓத திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதில், புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கிராம பெரியோர்கள் செய்து வருகின்றனர்.