பதிவு செய்த நாள்
02
செப்
2013
11:09
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, பல விதமான சிலைகள் தயார் நிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்தாண்டு இந்து முன்னணி சார்பில், இம்மாவட்டத்தில், 1,008 விநாயகர் சிலைகளும், ஈரோடு மாநகரில், 151 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தவிர, தனியார் அமைப்பினர், பொதுமக்கள் சார்பிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. முன்னதாக, விநாயகர் சிலைகள் தயாரிப்பில் விற்பனையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விநாயர் சிலைகள் விற்பனையாளர் ராஜேஷ் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், ஒரு அடி முதல், 15 அடி வரை உள்ள விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. ஐந்து வாகனம், இரண்டு வாகனம், யானை வாகனம், மயில் வாகனம், எலி வாகனம், கிளி வாகனம், ஐந்து தலை விநாயகர் என பல்வேறு வாகனத்திலும், முருகனுடன் அமர்ந்திருப்பது போலவும், விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள், 50 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது, என்றனர்.