பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
திருப்பதி: தனி தெலுங்கானா பிரச்னையால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், உண்டியல் வசூல் குறைந்து வருகிறது. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளில், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப் போராட்டத்தினாலும், திருமலைக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டதாலும், 48 மணி நேர முழு அடைப்பு காரணமாகவும், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 77.59 கோடி ரூபாய், உண்டியல் காணிக்கையாக வசூலானது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத வசூல், 62.07 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 22.94 லட்சம் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்தனர். இது, இந்த ஆண்டு, 19.50 லட்சம் பேராக குறைந்துள்ளது. முந்நூறு ரூபாய் விரைவு தரிசன பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் வருமானத்தில், எந்த மாற்றமும் இல்லை. ஆர்ஜித சேவைகளின் மூலம், கடந்த ஆண்டு, 2.67 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டு, 2.75 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.