பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு வலது தொடைப்பகுதி மற்றும் இடது உள்ளங்கால் பகுதியில் ஏற்பட்ட புண் ஆறாமல் இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், ராஜேஸ்வரி என்ற, 35 வயதுடைய யானை வளர்க்கப்பட்டு வருகிறது. சிறு வயதில், வாத நோயால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு, இடது கால் சூம்பி, ஊனம் ஏற்பட்டது. அதனால், தொடர்ந்து நிற்க முடியாமல், படுக்கவும் முடியாமல், ராஜேஸ்வரி அவதிப்பட்டு வருகிறது. சில ஆண்டுக்கு முன், ராஜேஸ்வரி, தவறி கீழே விழுந்ததில், உடல் முழுவதும் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில், ராஜேஸ்வரியை, காசநோய் தாக்கியது. அதற்காக, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய் குணமடைந்த நிலையில், ராஜேஸ்வரி உடல் மெலிந்து காணப்பட்டது. அதோடு, ராஜேஸ்வரியின் வலது தொடைப்பகுதி மற்றும் இடது உள்ளங்காலில் உள்ள புண் ஆறாமல் இருந்து வருகிறது. அதற்காக, சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் ஜெயராமன் தலைமையில், டாக்டர் பொன்னுவேல், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் சுப்ரமணி, தர்மசீலன், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர், நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு வந்து, யானை ராஜேஸ்வரிக்கு அளித்தனர். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது: கோவில் யானைக்கு வலது தொடை, இடது உள்ளங்காலில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. அதற்காக, வாரம் ஒருமுறை சிகிச்சை அளிப்பதால், விரைவாக குணமாகி வருகிறது. மேலும், போதிய நடைப்பயிற்சி கொடுக்கவும், முறையாக குளிப்பாட்டவும், சத்தான தீவனம் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கோசாலையில் உள்ள பசுக்களும், முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள இரு பொலிமாடுகளால், பசுக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது. எனவே, இரு பொலிமாடுகளையும், வேறு கோசாலைகளுக்கு அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.