பதிவு செய்த நாள்
06
செப்
2013
10:09
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும், உண்டியல் காணிக்கையாக, 117 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இத்தகவலை, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூதாட்டம்: ஏழுமலையானை தரிசிக்க வந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த ஆறு பேர், தாங்கள் தங்கியிருந்த மடத்தின் அறையில், நேற்று முன்தினம் இரவு, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 8,200 ரூபாய், பறிமுதல் செய்யப்பட்டது.
லாரி சாம்பல்: சித்தூர் அடுத்த குடிபாலா அருகே, ஸ்டேசனரி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, நேற்று காலை, 4:00 மணிக்கு, தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டது. டிரைவர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கினார். சிறிது நேரத்தில், லாரியில் இருந்து புகை கிளம்பியது. டிரைவர் அருகில் சென்று பார்த்தபோது, தீப்பிடித்திருப்பது தெரிந்தது. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். எனினும், லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஸ்டேசனரி பொருட்களும் சாம்பலாகின.
போக்குவரத்து பாதிப்பு: திருப்பதியில் இருந்து சென்னை வரும் வழியிலும், ரேணிகுண்டாவில் இருந்து, விமான நிலையம் செல்லும் வழியில், காஜுலமண்டையம் பகுதியிலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள், 3 கி.மீ., வரை அணிவகுத்து நின்றன. இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காளஹஸ்தி ஏர்பேடு பகுதியில், சாலை மறியலில், கலந்து கொண்ட பெண்கள், பல்வேறு விளையாட்டுக்களையும் விளையாடினர். இதனால், அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காளஹஸ்தி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச் செய்தனர்.