திருப்பதி கோயில் வரைபட மாதிரி கன்னியாகுமரி பஞ்.,சில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2013 11:09
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 22 கோடிரூபாய் செலவில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான வரைபடமாதிரி நேற்று கன்னியாகுமரி டவுன் பஞ்.,சில் தேவஸ்தான இன்ஜினியர்கள் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி விவேகானந்தகேந்திர வளாகத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி நடந்தது. திருப்பதி கோயிலை போல கட்டப்படவுள்ள இக்கோயிலில் திருப்பதியில் எந்த நேரத்தில் என்ன பூஜைகள் நடக்குமோ அதே நாள், அதே நேரத்தில் கன்னியாகுமரியில் கட்டப்படவுள்ள கோயிலிலும் நடக்கும். இரண்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள இக்கோயில் கட்டுமான பணிக்கு, நிர்வாகரீதியிலான பல்வேறு பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. கோயிலுக்கான வரைபடமாதிரி அனுமதி பெறுவதற்காக கன்னியாகுமரி டவுன் பஞ்., அலுவலகத்திற்கு நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானசெயற்பொறியாளர் ஜெகதீஸ்வரரெட்டி, உதவி செயற்பொறியாளர் பெத்தப்பரெட்டி ஆகியோர் வந்தனர். கன்னியாகுமரி டவுன் பஞ்.,செயல்அலுவலர் ராஜேந்திரனை சந்தித்து வரைபடமாதிரியை கொடுத்தனர். அப்போது விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரெட்டியிடம் கேட்டபோது:- கோயில் கட்டுமான பணிகளுக்கான வரைபட அனுமதிக்காக கன்னியாகுமரி பஞ்.,சில் கொடுத்துள்ளோம். மேலும் கடற்கரை மேலாண்மை குழுமத்தின் தடையில்லா சான்று பெற்ற பின்னர், நகர் ஊரமைப்பு துறையின் அனுமதி பெற்ற பின்னர் கோயில் கட்டுமான பணிகள் உடனடியா துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.