கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யும் நீர் ஆதாரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பின் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம். சமீப காலமாக ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்பு அவற்றை நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யும் போது, நீர் நிலைகள் மாசு ஏற்படுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளவாறு களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபட வைக்க வேண்டும். இவ்வாறான சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் விஜர்சனம் செய்ய வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விஜர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் தாங்கள் பூஜைக்கு வைக்கும் விநாயர் சிலைகளை கிருஷ்ணகிரி அணைக்கட்டின் கீழ் பகுதி,பேட்ராய ஸ்வாமி கோவில் குளம், கவுரம்மா குளம், தளி குளம், பஞ்சப்பள்ளி அணை, தென்பெண்ணை ஆறு, பச்சைக்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே விஜர்சனம் செய்ய வேண்டும். பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.