பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
மதுரை: தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோயில்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, கோயிலுக்குள் கேமரா, வீடியோ கேமரா மற்றும் லேப்-டாப் கொண்டு செல்ல அனுமதியில்லை. எனினும், மொபைல் போன்களுக்கு அனுமதி இருந்தது. அவற்றில் உள்ள பேட்டரியை இயக்கி வெடிக்கச் செய்யவும், போட்டோ எடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்படவுள்ளது.
பேக்கேஜ் ஸ்கேன்: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் மொபைல்போனுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது. டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 5 கோபுரங்களிலும் தலா ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பேக்கேஜ் ஸ்கேன் கருவிகள் விரைவில் பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் உடைமைகள் முழு அளவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஸ்கேன் செய்யும்போது உணவு பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாது, என்றார்.