பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
கோவை: விநாயகர் சதுர்த்தியை யொட்டி, புலியகுளம் முந்தி விநாயகர் சந்தனகாப்புடன் ராஜ அலங்காரத்திலும், ஈச்சனாரி விநாயகர் குங்கும தங்ககாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. சிவாச்சாரியர்கள் முந்தி விநாயகருக்கு திருமஞ்சனபொடி, பால், தயிர், மஞ்சள்பொடி, சந்தனம், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். சுவாமியின் முகம் மற்றும் துதிக்கைக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டது. மற்ற பாகங்களுக்கு செவ்வந்தி, வெட்டிவேர், மயில்கண், அருகம்புல், வெள்ளெருக்கு, வாடாமல்லி, செண்டுமல்லி, சம்பங்கி ஆகியவற்றால் மாலை தயாரித்து, 10 வரிசையில் 22 அடுக்குகளில் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* ஈச்சனாரி விநாயகருக்கு காலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டது. 3.30 மணிக்கு சுவாமிக்கு 13 வகை திரவியங்களில் அபிஷேகம் செய்தனர். குங்கும அலங்காரம் செய்து, தங்ககாப்பு அணிவிக்கப்பட்டிருந்தது. ரோஜா, வெற்றிலைபாக்கு, தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. காலை 4.00 மணி முதல் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை இசைக்கச்சேரியும், இரவு 7.00 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி புறப்பாடும் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்திருந்ததால், பொள்ளாச்சி ரோட்டில் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அருகே உள்ள 108 பிள்ளையார் கோவிலில் காலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம் செய்து, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் செவ்வந்தி பூ மாலை, வெள்ளெருக்குமாலை அணிவிக்கப்பட்டது. 108 தேங்காய் உடைக்கப்பட்டு, 216 வாழைப்பழம் சுவாமிக்கு படைக்கப்பட்டது.
* காந்திபுரம் லாலா கார்னர் சித்திவிநாயகர் கோவிலில் காலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டது. அபிஷேகம் செய்து, சுவாமிக்கு தங்ககாப்பு அணிவிக்கப்பட்டிருந்தது.
* ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவில், காமாட்சியம்மன் கோவில், அன்னபூர்னேஸ்வரி கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சாரதாம்பாள் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில்களிலுள்ள விநாயகர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட திரண்டிருந்தனர்.
* மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள சக்தி விநாயகர், காட்டூர் வலம்புரி விநாயகர், ஹவுசிங் யூனிட் ராஜகணபதி, கோ-ஆப்ரேட்டிவ் காலனி சக்திவிநாயகர், நடூர் ஜோதி விநாயகர், ஊட்டி மெயின் ரோடு அரசமர செல்வ விநாயகர் உள்பட நகரில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
*மேட்டுப்பாளையம் சேரன்நகர் 2ல் உள்ள அதிஷ்ட விநாயகர் கோவிலில் காலையில் அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து விநாயகர் தேர் ஊர்வலமும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
* சிவன்புரம் காலனி அருகில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில், சிறப்பு பூஜையும், 108 கலச ஆவாஹணமும் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.