பதிவு செய்த நாள்
10
செப்
2013
11:09
கோவில்பட்டி: வில்பட்டியில் உலகநலன் வேண்டியும், நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்து பிள்ளைமார் சமுதாய ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் 24ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. இதையொட்டி கடந்த 2ந்தேதி கோயிலில் நாட்கால் நட்டுதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தேவதா அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், புண்யாக வாஜனம், தனபூஜை, தான்ய பூஜை, நவக்கிரக பூஜை, கோமாதா பூஜை, “மங்கலி பூஜை, கன்யா பூஜை நடந்தது. சிறப்பு பூஜைகளை இலுப்பையூரணி ராமமூர்த்தி செய்தார். இதையடுத்து அன்னதானமும், மாலையில் பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி உலகநலன் வேண்டியும், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் ஸ்ரீசக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இல்லத்து பிள்ளைமார் சங்க தலைவர் ஷண்முகசந்தரம், தொழிலதிபர் ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க செயலாளர் முருகன், 7வது வார்டு கவுன்சிலர் முத்துராஜன், 8வது வார்டு கவுன்சிலர் சண்முகவேல், புதுக்கிராமம் வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் இளைஞரணி செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் விபி முத்தையாபிள்ளை மீனாட்சி அம்மாள் இன்ஜி., கல்லூரி தலைவர் சங்கர் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசன் முன்பு துவங்கிய ஊர்வலம் யானை முன்செல்ல, மேளதாளங்கள் முழங்க மேம்பால கீழ்புறம், புதுக்கிராமம் மெயின் ரோடு வழியாக ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலை வந்தடைந்தது. மேலும் ஊர்வலத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்ட மாணவ மாணவிகள் பல்வேறு மாநில கலாச்சார ஆடை, அலங்காரம் செய்தும், சிவன் பார்வதி போன்ற கடவுள் வேடமணிந்தும், காந்தி, வஉசி, பாரதி போன்ற தேசத்தலைவர்கள் வேடமணிந்தபடியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விழாவில் கோயில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள், சங்க முன்னாள் தலைவர் முத்து, முன்னாள் செயலாளர் சோக்ராமசாமி, கோயில் விழாக்குழு முன்னாள் தலைவர் மாரியப்பன், கவுன்சிலர்கள் முத்துராஜன், சண்முகவேல், இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சங்க தலைவர் சரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.