பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
*மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சரியான ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை உடல்நலத்தைக் காக்கும். பொறாமை, கோபம், வஞ்சக எண்ணம், கவலை ஆகியவை காந்தசக்தியை அளவுக்கு மீறி அழித்துவிடும். தீய ஆசைகள் எழாவண்ணம் வேலி அமைத்துக் கொள்ளுங்கள்.
*வாரத்திற்கு ஒருமுறை இரவில் உணவு உண்ணாமல், லேசான உணவான பழவகைகளும், கொஞ்சம் பாலும் அருந்தி விட்டு உறங்கச் செல்லுங்கள். இதனால், வயிறு தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
*ஜீரணிக்கும் அளவுக்கு மட்டுமே உண்ணுங்கள். நோய்களை போக்கும் சக்தி இயற்கையாகவே உடலிற்கு உள்ளது. உணவு உண்டதும் கடினமான வேலை, ஓய்வு ஆகியவற்றைத் தவிருங்கள். இதனால், வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்புண்டு.
*கழிவாக வெளியேறும் எந்தப் பொருளும் உடல்மீது தங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனென்றால், அவை கிருமியாகும் அபாயம் இருக்கிறது. எனவே உடலை சுத்தமாக வைத்திருக்கவும்.
*அதிகாலையிலேயே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, இறைவணக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுங்கள். வாழ்வில் உயர்வதற்கு இவை மிகவும் துணைநிற்கும்.
*நிலா ஒளியின் ஏற்றத்தாழ்வுகள் உயிர்களின் உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அறிவைத் தீட்டும் வகையில் பயிற்சி கொடுப்பதும், உணவில் ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதும் அவசியம். புனிதமான இந்நாட்களில் விரதமிருப்பது மிகவும் நல்லது.
*சுயநல மனப்பான்மை கொண்டவன் தற்பெருமை கொண்டிருப்பான். எல்லாம் கடவுள்மயம் என்று உணர்ந்தவனோ, அகந்தையை விட்டு விடுவான்.
*ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்குடும்பம், உறவினர், நாடு, உலக சமுதாயம் ஆகிய ஐந்துவகையிலும் கடமைகள் இருக்கின்றன. தேடும் செல்வத்தை இந்த வழிகளில் முறையாக செலவழிக்க வேண்டியது அவசியம்.
*அதிகமான பணம் தனி ஒரு நபரிடம் சேரும்போது, பண்புநலன் கெட வழி உண்டாகும். இதனால் சமூகத்திற்கும் பிரச்னை ஏற்படும். அளவுக்கு அதிகமான செல்வத்தை சமூகநலனுக்கு செலவிட்டால் மனஅமைதியும், நிறைவும் உண்டாகும்.
*போதும் என்ற மனமும், செல்வத்தை அளவாகத் தேடுதலும், தன் தேவை போக பிறருக்கு உதவுவதும் செல்வத்தை சரியாக நிர்வகிக்கும் வழியாகும்.
*இன்றைய சமுதாயத்தில் மனித உறவுகளை விட்டு விலகுவதும், பொருட்களின் கவர்ச்சியில் இருந்து தப்பி ஓடுவதும் முடியாத காரியம். அது கோழைத்தனமானதும் கூட. உலகம் எப்படி இருந்தாலும், கடமையை முறையாகச் செய்து கொண்டிருப்பது ஒன்றே சரியான வழி.
*நாம் பிறரை வாழ்த்தும் போது அன்பு மயமாகி விடுகிறோம். முழுமனதுடன் அன்பு கனிந்து வாழ்த்தினால், அதைப் பெறுபவர் மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்து அலை சென்றடைகிறது. இதனால், உலகமே நன்மை பெறுகிறது.
*மலர்ச்செடி, எல்லாருக்கும் மணத்தைப் பரப்புகிறது. அதுபோல, நல்ல மனநலமும், உடல்நலமும் உள்ளவர்களால் எல்லாரும் பயனடைகிறார்கள்.
-வேதாத்ரி மகரிஷி