மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: சப்பர முகூர்த்ததிற்கு ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 12:01
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று மாலை முகூர்த்த சப்பரம் தொடங்கவுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவான மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் போன்ற 15நாட்கள் தொடர் திருவிழாவாக நடைபெறும். இந்நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்தத்திற்கான ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் ஆயிரம்பொன் சப்பர முகூர்த்தத்திற்கான ஸ்தலாங்கம் எனப்படும் விழாவிற்கான அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள்ளகழர் கோவில் துணை ஆணையர் யக்ஞ நாரயணன் மற்றும் கோவில் நிர்வாகிகள், முன்னிலையில் கள்ளழகர் கோவில் பட்டர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சி தொடங்குவதை முன்னிட்டு பாராம்பரிய முறைப்படி வெற்றிலைபாக்கு கொடுத்து சப்பர முகூர்த்ததிற்கான அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 2.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஆயிரம்பொன் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.