திசையன்விளை: உவரியில் விநாயகர் சிலைகள் வரும் 15ம் தேதி விசர்ஜனம் செய்யப்படுகின்றது. நெல்லை கிழக்கு மாவட்ட இந்து முன்னனி சார்பில் ராதாபுரம், வள்ளியூர், நான்குநேரி ஒன்றிய பகுதிகளில் மூன்றரை அடி முதல், பதினொன்றரை அடிவரை உயரமான 65 விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இச்சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது. இச்சிலைகள் அனைத்தும் வரும் 15ம் தேதி ஞாயிற்றுகிழமை தனித்தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு திசையன்விளை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள விநாயகர் கோயில் அருகில் கொண்டுவரப்படுகின்றது. அன்று மதியம் 2 மணிக்கு அங்கிருந்து விநாயகர் சிலைகளுடன் வாகன பேரணி துவங்குகிறது. பேரணி மெயின்ரோடு, தாம்போதி, அப்புவிளை, இடையன்குடி வழியாக கரைச்சுத்துஉவரிக்கு செல்கிறது. அங்கு சுயம்புலிங்க சுவாமி கோயில் முன் அனைத்து சிலைகளும் அணிவகுத்து வைக்கப்படுகின்றது. பின்னர் இந்து முன்னனி பொதுக்கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து அனைத்து சிலைகளுக்கும் தீபாராதனை செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு உவரி கடலில் சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்யப்படுகின்றது. இத்தகவலை நெல்லை கிழக்கு மாவட்ட இந்து முன்னனி தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.