பதிவு செய்த நாள்
12
செப்
2013
04:09
கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டார். காசிராஜனுக்கு அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்னும் மூன்று மகள்கள் இருந்த னர். தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணி,அவர்களைத் தேரில் ஏற்றிச்சென்றார் பீஷ்மர். ஆனால், அம்பை சாலுவதேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை, தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள். அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் அவளை மணம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட அவர், குருவின் பேச்சைக் கே ட்காத சீடனுடன் போரிட்டார்.அவரிடம் வில்வித்தை கற்ற பீஷ்மர், அவரையே வெற்றி கொண்டார். தோல்வியடைந்த பரசுராமர், அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்றுவிட்டார். குருவே சொன்னாலும்கூட, ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு ஒரு உதாரணம். ஆனால், நம்ம ஊரில் எத்தனையோ தேர்தல் நடந்திருக்கிறது! எவ்வளவோ வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஒன்றும் நிறைவேறக் காணோம். பாரதம் பிறந்த பாரத தேசத்தின் நிலை இப்படி இருக்கிறது! உம்... அந்த கிருஷ்ணன் தான் திரும்ப பிறந்து வந்து, குரு÷க்ஷத்திர யுத்தகளத்தில் இவர்களைப் பலியிட வேண்டும்!