பதிவு செய்த நாள்
13
செப்
2013
10:09
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களான, சென்னை, கோவை, சேலம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து, கேரள மாநிலத்துக்கு, 150 சிறப்பு பஸ்கள், இன்று முதல், இயக்கப்படுகின்றன. கேரளாவில், பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை, இம்மாதம் 16ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, கேரள மாநிலமே விழாக் கோலம் பூண்டு வருகிறது. பிற மாநிலங்களில் வசித்து வரும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக, கேரள மாநிலத்துக்கு வந்து கொண்டுள்ளனர். இன்று வெள்ளிக் கிழமையை தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால், தமிழக கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், இன்று முதல், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும், அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களும், பிற கோட்டங்களில், முன்பதிவு கொண்ட பஸ்களின் முன்பதிவு அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்தின் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும், ரயில்களிலும் முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளது. பஸ், ரயில்களில் முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளதால், இன்று முதல், 25 சிறப்பு பஸ்களை இயக்க, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதே போல், கோவை கோட்டத்தின் சார்பில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களில் இருந்து, 30 பஸ்களும், திருநெல்வேலி கோட்டத்தின் சார்பில், திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து, 30 பஸ்களும், பிற கோட்டங்களின் சார்பில், சென்னையில் இருந்து, 45 சிறப்பு பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுரை, பெங்களூரு, திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும், இன்று முதல், செப்டம்பர், 18 வரை இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. சேலம், சென்னை, கோவை, நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளின் கூட்டத்தை கண்காணித்து, அதற்கேற்ப மேலும், 50 சிறப்பு பஸ்களை இயக்கும் வகையில், அந்தந்த கோட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. - நமது நிருபர் -