பதிவு செய்த நாள்
13
செப்
2013
10:09
திருப்பதி: திருமலைக்கு பஸ்கள் இயக்க மாட்டோம் என்ற முடிவை, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம், வாபஸ் பெற்றது. தனித் தெலுங்கானா, எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்த, போராட்டக் குழுவினர், இன்று (13ம் தேதி) நள்ளிரவு முதல், ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு வரை, 48 மணி நேர, "பந்த் அறிவித்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள், போக்குவரத்துக் கழக மேலாளரை, நேற்று முன்தினம் சந்தித்து, திருமலைக்கு மட்டும் பஸ்களை, இயக்கும்படி கேட்டனர்; மேலாளர் மறுத்து விட்டார். தேவஸ்தான அதிகாரிகள், நேற்று, மீண்டும் கேட்டுக் கொண்டதாலும், ஆந்திர மாநில போக்குவரத்து துறை அமைச்சரின் வேண்டுகோள் காரணமாகவும், திருமலைக்கு மட்டும் பஸ் நிறுத்தத்தை, வாபஸ் பெற்றுள்ளதாக, போராட்டக் குழுவினர் அறிவித்தனர். "திருமலைக்கு பக்தர்கள் வரும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். அலிபிரியில் இருந்து மட்டும், பஸ்கள் இயக்கப்படும் என, அவர்கள் கூறியுள்ளனர். "திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்தும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்தும், தேவஸ்தான இலவச பஸ்கள் இயக்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முழு அடைப்பையொட்டி, திருமலை வரும் பக்தர்களுக்காக, ரயில் நிலையம் அருகிலும், திருச்சானூர் கோவிலிலும், அன்னதானம், பால், மோர் மற்றும் குடிநீர் வழங்க, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. "மற்ற பகுதிகளில், அறிவித்தபடி, முழு அளவில், "பந்த் நடைபெறும் என, போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.