பதிவு செய்த நாள்
13
செப்
2013
02:09
ஆர்.கே.பேட்டை: அம்மன் கோவில் திருவிழாவில், பார்வதியும், சிவனும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தனர். இளைஞர்களின் மதிநுட்பத்தால்,பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பொன்னியம்மன், காமாட்சியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நடந்தது. கடந்த செவ்வாய் இரவு, அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.நேற்று முன்தினம், யானை வாகனம், இன்று காலை காமதேனு வாகனத்தில் அம்மன் உற்சவம் நடந்தது.
காமாட்சியம்மன், பொன்னியம்மன் கோவில் நிர்வாகிகள், போட்டிபோட்டுக்கொண்டு, அம்மனை அலங்கரித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், அம்மனை அலங்கரிப்பதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அலங்காரம் நடக்க நள்ளிரவு 12:00 மணி ஆனது. கிராம மக்கள், பொன்னியம்மன் கோவிலுக்கும், காமாட்சியம்மன் கோவிலுக்கும் இரவு முழுவதும் வந்து தரிசனம் செய்தனர். ஆட்டம்,பாட்டம், கச்சேரி என கடந்த மூன்று நாட்களாக, அம்மையார்குப்பம், தூங்கா நகரம் ஆனது. நேற்று காலை காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவின் கடைசி நாளில், பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள், அம்மனை மதிநுட்பத்துடன் அலங்கரித்தனர். சிவலிங்கதை செதுக்கி, அதன் உள்ளே அம்மனை அமர்த்தினர். லிங்கமும்,அம்மனும் ஒன்றாக காட்சியளி“த்த அர்த்தநாரீஸ்வரருக்கு, முருகர், விநாயகர் பாலாபிஷேகம் செய்வது போன்று தத்ரூபமாக வடிவமைத்தனர். தங்க குடத்தில் இருந்து தொடர்ந்து பால் கொட்டும்படியாக, மின்மோட்டார் பொருத்தப்பட்டது. வீதியில் வலம் வந்த உற்சவ மூர்த்திக்கு, தொடர்ச்சியாக பாலாபிஷேகம் நடத்தப்பட்டதும், லிங்கத்தில் அம்மனை வைத்து, அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்ததும், பக்தர்களை பரவசமடையச் செய்தது. தொடர்ந்து பகல் 12மணியளவில், உற்சவர் குதிரை வாகனத்தில் வலம் வந்தார்.