பதிவு செய்த நாள்
14
மார்
2011
01:03
சுகமகரிஷி சேஷாசலத்தை அடைந்து சீனிவாசனைச் சந்தித்தார். சீனிவாசன் அவரைத் தக்கமரியாதையுடன் வரவேற்று அமரச் சொன்னார். சீனிவாசனிடம் அவர் முகூர்த்த பட்டோலையை வழங்கினார். அதைப் படித்ததும் சீனிவாசனுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் போனது. நல்லசேதி கொண்டு வந்த சுகமகரிஷியை அவர் வாழ்த்தினார். பின்னர் ஒரு ஓலையில் ஆகாசராஜனுக்கு பதில் எழுதினார். ஸ்ரீ ஸ்ரீமன் மண்டலேச்வர ராஜாதிராஜன ராஜசேகரனான ஆகாசராஜன் அவர்களே! உங்கள் பத்மபாதங்களின் சன்னதிக்கு சேஷாசலத்தில் வசிக்கும் ஸ்ரீமன் நாராயணனாகிய சீனிவாசன் மிக்க நன்றி தெரிவித்து எழுதும் கடிதம் இது. மகாராஜாவே! தாங்கள் தயைகூர்ந்து அனுப்பிய முகூர்த்த பத்திரிகை கிடைத்தது. அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தாங்கள் குறித்துள்ள லக்கின நாளுக்கேற்றவாறு, என் குடும்பபரிவார சமேதனாக வந்து தாங்கள் அளிக்கும் கன்யா தானத்தை சாஸ்திரப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்... இவ்வாறு எழுதிய கடிதத்துடன், சுகமகரிஷி மீண்டும் நாராயணபுரத்தை அடைந்து ஆகாசராஜனிடம் ஒப்படைத்தார். ஆகாசராஜனுக்கு இந்த பணிவான பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீமன் நாராயணன், தனக்கு தகுந்த மரியாதை அடைமொழிகள் கொடுத்து அனுப்பிய கடிதமல்லவா! அந்தப் பணிவான வார்த்தைகளை அவன் மிகவும் ரசித்துப் படித்தான். இவ்வாறாக, இருதரப்பும் திருமண நிச்சயம் செய்ததும் நினைத்தவனே கணவனாகப் போகிறான் என பத்மாவதி மகிழ்ந்தாள். இந்நிலையில், சீனிவாசனுக்கு மனக்குழப்பம். திருமணம் நிச்சயித்தாயிற்று. மணமகளோ ராஜா வீட்டுப் பெண், இளவரசி. அவளை அவளது இல்லத்தில் செல்வச் செழிப்புடன் வளர்த்திருப் பார்கள்.
நம்மிடமோ காசு பணம் இல்லை. திருமணத்தை நல்லமுறையில் நடத்த வேண்டுமென்றால் பணம் வேண்டுமே! இங்கிருந்து கிளம்பும்போது, மணமகளுக்குரிய பட்டுப்புடவை, ஆபரணங்கள் உள்ளிட்ட சீதனங் களை எடுத்துச் செல்லாவிட்டால், தன்னைப் பிச்சைக்காரன் என உலகம் எண்ணாதா! பத்மாவதி தான் என்ன நினைப்பாள்! அவளது குடும்பத்தார் தன்னை இழிவாக எண்ண நேரிடுமே... இந்த சிந்தனையுடன் இருந்தபோது, நாராயண, நாராயண, நாராயண,என்ற குரல் ஒலித்தது. நாரதமகரிஷி அங்கு வந்தார். சீனிவாசா, உன் திருமண விஷயம் அறிந்தேன். உன்னைப் பார்த்து விட்டு செல்லவே வந்தேன், என்றார். சீனிவாசனின் முகம் வாடியது. நாரதர் அவரிடம், சீனிவாசா! புதுமாப்பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும், உன் முகமோ வாடியிருக்கிறதே! என்ன பிரச்னை? என்றார். நாரதரே! திருமணத்தை நிச்சயித் தாயிற்று. ஆனால், லட்சுமியையே மார்பில் சுமந்த என் நேரம் சரியில்லை. திருமணச்செலவுக்கு பணம் வேண்டும், அது எப்படி கிடைக்குமென்று தான் தெரியவில்லை. இதனால், மனம் எதிலும் நாட்டம் கொள்ள மறுக்கிறது, என்று சீனிவாசன் சொல்லவும் நாரதர் சிரித்தார். சீனிவாசா! இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? குபேரனிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. அவனிடம் கடன் வாங்கி கல்யாணத்தை முடி. பின்னர், கடனைத் திருப்பிக் கொடுத்து விடலாம்,என்றார். சீனிவாசனுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது.உடனே கருடனை வரவழைத்தார். கருடா! நீ சென்று குபேரனை அழைத்து வா, என்றார். கருடனும் சென்று குபேரனை அழைத்து வந்தான். நாரதரே குபேரனிடம் பேசினார். குபேரா! ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரமாக சீனிவாசன் என்னும் பெயரில் பூலோகத்தில் இருப்பதை அறிவாய். இப்போது, லட்சுமிதேவி சீனிவாசனை விட்டுப் பிரிந்திருப்பதால், அவன் சகல ஐஸ்வர்யங்களையும் இழந்து நிற்கிறான். ராமாவதார காலத்தில் வேதவதி என்ற பெயரில் இருந்த நிழல் சீதை, இப்போது பத்மாவதியாகப் பூமியில் அவதரித்து, ஆகாசராஜனின் அரண் மனையில் வளர்கிறாள்.
அவளுக்கும், சீனிவாசனுக்கும் காதல் ஏற்பட்டது. இப்போது, திருமணமும் நிச்சயிக்கப் பட்டு விட்டது. ஆனால், ராஜா வீட்டுப் பெண்ணான அவளைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு சீனிவாசனிடம் பணமில்லை. நீ அவனுக்கு கடன் கொடுத்து உதவினால், அவன் அசலும் வட்டியுமாக திருப்பியளிப்பான். அவனுக்கு எவ்வளவு வேண்டும், வட்டி விபரம், திருப்பித்தரும் கால அளவையெல்லாம் நீங்கள் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். சீனிவாசனுக்கு பணம் கொடுப்பதன் மூலம், நீ பிறந்த பலனை அடைவாய், என்று சிபாரிசு செய்தார். ஸ்ரீமன் நாராயணனின் திருமணத்துக்கு என்னிடமுள்ள செல்வம் உதவுமானால், அதை விட வேறு பாக்கியம் ஏது? தருகிறேன், என்ற குபேரன், 3ஆயிரத்து 364 ராம நாணயங்களைத் தந்தான். இந்தத்தொகை இன்றைய மதிப்புக்கு பல ஆயிரம் கோடிகளைத் தொடும். தொகைக்கான வட்டியை நிர்ணயித்து பத்திரம் எழுதினான். அதில், சீனிவாசன் கையெழுத்திட்டார். அன்புசார்ந்த குபேரனுக்கு, நீ கொடுத்த பணத்திற்கு கலியுகம் முழுமையும் வட்டி செலுத்துவேன், கலியுகம் முடியும் வேளையில் அசலையும், மீதி வட்டியையும் செலுத்திவிடுவேன், என உறுதியளித்தார். இப்போது, திருப்பதியில் ஆண்டு வருமானம் ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதை குபேரன் வட்டியாக பெற்றுக் கொண்டிருப்பதாக ஐதீகம். வட்டியே இவ்வளவு என்றால், சீனிவாசன் பெற்ற கடன்தொகையின் அளவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கலியுகம் முழுவதும் கோடிக்கணக்கில் வட்டி கிடைக்கப்போகிறது என்றால் குபேரனுக்கு சந்தோஷம் ஏற்படாதா என்ன! அவன் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தான்.ஆனால், மனதுக்குள் ஒரு சந்தேகம்! ஏதுமே இல்லாத சீனிவாசன், இவ்வளவு பெரிய அசலுக்கு எப்படி வட்டி செலுத்துவார் என்று! குபேரனின் மனஓட்டத்தை அறிந்த சீனிவாசன் அதற்கு அளித்த பதில் குபேரனை வியப்பில் ஆழ்த்தியது.